Published : 09 Oct 2020 07:56 AM
Last Updated : 09 Oct 2020 07:56 AM

மாநகர போக்குவரத்து கழகத்தில் அதிக அளவில் சொகுசு பேருந்துகள் இயக்கம்: மறைமுக கட்டண உயர்வால் பயணிகள் அவதி

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கட்டண பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிக பட்சமாக ரூ.24, விரைவுப் பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.7, அதிக பட்சம் ரூ.35, சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12, அதிகபட்ச கட்டணம் ரூ.49 எனவும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், கடந்த மாதம் முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், முன்பு இயக்கப்பட்ட சாதாரண, விரைவு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் சொகுசு கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் சாதாரண பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, கிண்டி - செம்மஞ்சேரி, பிராட்வே - பெரும்பாக்கம், பிராட்வே - குன்றத்தூர், அம்பத்தூர் - வேளச்சேரி, மணலி - பிராட்வே, மீஞ்சூர் - பிராட்வே - கூடுவாஞ்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் அதிக அளவில் சொகுசு கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்துக்கே செலவு

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் மக்கள் ஏற்கெனவே அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு வழித்தடங்களில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மின்சார ரயில்களின் சேவை தொடங்காத நிலையில், நீண்ட தூரம் செல்லும் வழித்தடங்களில் சொகுசு பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இதனால், சாதாரண ஏழை, எளிய மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அவர்களின் அன்றாட வருமானத்தில் பெரும்பகுதி போக்குவரத்துக்கே செலவிட வேண்டியுள்ளது. எனவே, மக்களை பாதிக்கும் இந்த மறைமுக கட்டண உயர்வைக் கைவிட வேண்டும். கூடுதலாக சாதாரண பேருந்துகளை அதிகரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அதிகாரிகள் சொல்வது என்ன?

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘கரோனா தாக்கத்தால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இல்லை. இருப்பினும், பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு தினமும் 2,000-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளை இயக்கி வருகிறோம். இதில், 50 சதவீத பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. சொகுசு கட்டண பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து இயக்கவில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x