

முதல்வர் பழனிசாமிக்கு தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பணிகளுக்காக 100 சதவீத பணியாளர்களும் தினமும் சென்னை தலைமைச் செயலகத்துக்கு பணிக்கு வருகின்றனர். அலுவலகத்துக்குள் நுழையும் பணியாளர்கள், பொதுமக்கள் தங்கள் கைகளை தானியங்கி சானிடைசர் அமைப்பு மூலம் சுத்தம் செய்துகொள்ளும் வசதியை அரசு செய்துள்ளது. அனைத்து கழிவறைகளிலும் கைகளைக் கழுவ சோப்பு, சானிடைசர்கள் வழங்குவது, இருக்கைகளை கிருமிநாசினிகள் மூலம் தொடர்ந்து சுத்தம் செய்வது அவசியமாகிறது.
மேலும், அமைச்சர்கள், அரசு செயலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், காவலர்கள், ஊடகத் துறையினர், தலைமையிட பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தலைமைச் செயலகத்துக்கு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 வாரங்களில் தலைமைச் செயலகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகள், முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, கரோனா தொற்று சமூக பரவல் ஆகாமல் இருக்க, மத்திய அரசின் அலுவலக குறிப்பாணையில் கூறியுள்ளபடி, 50 சதவீத பணியாளர்களை மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், நீரிழிவு, புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலுவலகம் வருவதற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.