

சென்னையில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மாலை மற்றும் இரவுநேர காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில், அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட என்.எஸ்.கே. சாலையில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் 2-ம் கட்ட மருத்துவ முகாமைசுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது சென்னையில் குறிப்பாக, குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு எவ்வளவு பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிரித்துள்ளது என கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால், மக்களிடையே அலட்சியப் போக்கு நிலவுகிறது. மக்களிடம் மனமாற்றம் தேவை.
ஒருசில மண்டலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. இங்கு தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்தில் மாலை 3 முதல் 5 மணி வரை மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறியதாவது:
மாநகராட்சி மக்கள்தொகையில் 20 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் முகக் கவசம் அணிவதில் அலட்சியம் ஏற்பட்டுள்ளது. இது மிக மிக ஆபத்தானது. வரும் 2 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டை விட்டு வெளியில் வரும்போது முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் வழிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்களை ஒரு மாதம் மூட நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் தகரம் அடிப்பது 25 நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையர் பா.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.