Published : 09 Oct 2020 07:25 AM
Last Updated : 09 Oct 2020 07:25 AM

பல்வேறு செயல் திட்டங்கள் மூலமாக பாலாறுக்கு புத்துயிர் கொடுக்கும் பொதுப்பணித் துறை: பயன்பெறும் விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு

பாலாற்றில் ரூ. 32.50 கோடியில் வாயலூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை.

செங்கல்பட்டு

பாலாறு என்றாலே வறண்ட மணல்படுகைகளும், மணல் கொள்ளையும்தான் கண்முன் வந்து நிற்கும்.கர்நாடக மாநில நந்திதுர்கத்தில் பிறக்கும் பாலாறு ஆந்திரம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் 348 கி.மீ தூரம் பயணித்து செங்கைமாவட்டம் வாயலூர் முகத்துவாரத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இந்த ஆறு சென்னை, வேலூர்,காஞ்சி மாவட்டங்களின் குடிநீர்தேவையை பெருமளவு நிறைவேற்றுகிறது. வேலூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலப் பகுதிக்கு பாசனவசதி வழங்குகிறது. பாலாற்றில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரை தடுப்பணைகள் அமைத்து சேமிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் 40 ஆண்டுகால கோரிக்கை. இதன் உபரிநீர், ஆண்டொன்றுக்கு சராசரியாக 9 டிஎம்சி கடலில் வீணாக கலக்கிறது.

கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் வஞ்சகத்தால் பாலாற்றில் நீர்வரத்து குறைந்தாலும், தற்போதுபல ஆண்டுகளுக்குப் பின்பு தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு ஓடத் தொடங்கி, விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பாலாற்றில் பூமிக்கு மேல், கீழ் என 2 பகுதியிலேயும் நீர் ஓடும். மேல் பகுதி வற்றினாலும் கீழ்ப் பகுதி வற்றவே வற்றாது. மணல் கொள்ளை, பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகளால் பாலாறு தனது பொலிவை இழந்திருந்தது. இதன் பழைய நிலையை மீட்டு,உயிர்ப்பிக்க பல்வேறு இடங்களில் செக் டாம், நிலத்தடி தடுப்பணைகளை பொதுப்பணித் துறையினர் அமைத்து வருவது வரவேற்புக்குரியது. இந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக, வாயலூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் அப்பகுதி வளமாக மாறிஇருக்கிறது என்றனர்.

பொதுப்பணித் துறையினர் கூறியதாவது: பாலாற்றில், வாலாஜா அருகில் 1858-ம் ஆண்டில்கட்டப்பட்ட ஒரே தடுப்பணைதான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ரூ.32.50 கோடி நிதியால் வாயலூர் தடுப்பணைகட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணைக்கான அடித்தளம், ஆற்று மணலைக் கடந்து களிமண் பரப்புவரை சுமார் 27 அடி ஆழத்துக்குநவீன முறையில் அமைக்கப்பட்டிருப்பதால், கடல்நீர் ஊடுருவி நிலத்தடி நீருடன் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேக்கிய நீரைக் கொண்டும், உயர்த்தப்பட்ட நிலத்தடி நீரைக் கொண்டும் அங்குள்ள 14 கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஏற்கெனவே, செங்கல்பட்டை அடுத்த பாலூரில் கடந்த 2014-ம்ஆண்டில் ரூ.16 கோடியே 83 லட்சம் மதிப்பில் நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கு தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது இதன்மீது, ரூ.23.70 கோடியில் கூடுதலாக தடுப்பணை கட்டும் திட்டம் பரீசிலனையில் உள்ளது.

வல்லிபுரம் - ஈசூர் இடையே ரூ.30.90 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. உள்ளாவூரில் ரூ.52.10 கோடியில் புதியதடுப்பணைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். உதயம்பாக்கத்தில் ரூ.52.76 கோடியிலும், வெங்கடாபுரத்தில் ரூ.67.50 கோடியிலும், வெங்குடியில் ரூ.52.10 கோடியிலும்,வெள்ளத்தடுப்பு திட்டத்தின்கீழ் நல்லாத்தூரில் ரூ.74.50 லட்சம், பெரும்பாக்கத்தில் ரூ.63 கோடியிலும் தடுப்பணைகள் கட்டும் திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன.

இவற்றில் 4.5 டிஎம்சி வெள்ளநீரை சேகரிக்கலாம். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பாலாறு தனது பழைய நிலையை அடையும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x