

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், வேலூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. கடந்த சில வாரங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆனந்த்குமார் - கற்பகம் தம்பதியரின் 8 வயது மகள் ஷிவாணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (45) என்பவரின் மனைவி லில்லி (40) இறந்தார். அதேபோல திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த மோகன் பிரசாத் மகன் ரூபேஷ் (15) டெங்கு காய்ச்சலால் இறந்தார். உயிரிழந்த ரூபேஷின் தங்கை மதுரிதாவுக்கும் (13) டெங்கு காய்ச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மதுரிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். இவை தவிர சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
4 மாவட்டங்களில் டெங்கு
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால், அந்த மாவட்டங்களில் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. டெல்லிக்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை, இந்த 4 மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதனால் இந்த 4 மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவது, கொசுப் புழுக்களை ஒழிப்பது போன்ற பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் யார்டுகளில் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அச்சம் வேண்டாம்
டெங்கு காய்ச்சலால் யாரும் அச்சம்கொள்ள வேண்டாம். டெங்கு காய்ச்சலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ளன. காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும். யாரும் சுயமாக கடைகளுக்குச் சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொசு வலை இல்லை
கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் கொசு வலை கட்டிய படுக்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொசு வலை கட்டாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமியிடம் கேட்டபோது, “அரசு மருத்துவமனை வளாகத்தில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால், அப்போது டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு கொசு வலை கட்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகள் வளாகத்திலும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கொசுக்கள் இல்லை. அதனால் கொசு வலை கட்டாமல் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.