குமரி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு: வாழைத்தார் பாரத்தில் மறைத்து கொண்டு சென்ற 4 டன் ரேஷன் அரிசியுடன் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய லாரி

குமரி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு: வாழைத்தார் பாரத்தில் மறைத்து கொண்டு சென்ற 4 டன் ரேஷன் அரிசியுடன் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய லாரி
Updated on
1 min read

வாழைத்தார்களில் மறைத்து வைத்து கேரளாவுக்கு 4 டன் ரேஷன் அரிசியுடன் கடத்திச் சென்ற லாரி தக்கலை அருகே விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் காயமடைந்த லாரி ஓட்டுனர் தப்பி ஓடினார்.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தும் சம்பவம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த நேரத்தில் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு அதிகரித்திருந்ததால் இடையில் ரேஷன் அரிசி கடத்தல் குறைந்திருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதால் கடந்த ஒரு மாதமாக மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் பரவலாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து நேந்திரன் வாழைத்தார்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி தக்கலையை அடுத்த கொல்லன்விளையில் சென்றபோது எதிரே கையுறைகள் தயாரிக்கும் உபகரணங்களுடன் டேங்கர் லாரி ஒன்று வந்தது.

கட்டுப்பாட்டை இழந்த வாழைத்தார் ஏற்றிய லாரி, டேங்கர் லாரியுடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் லாரியின் முன்பகுதி சேதமான நிலையில் வாழைத்தாரின் கீழ் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் வெளியே வந்து விழுந்தன.

இதனால் அந்த லாரியில் இருந்த ஓட்டுனர் காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்த தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் போலீஸார் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது வாழைத்தாரில் மறைத்து வைத்து ரேஷன் அரிசி மூட்டைகள் கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. வாழைத்தாருடன் கவிழ்ந்த 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் லாரியை மீட்டு போலீஸார் தக்கலை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

வாழைத்தாருடன் ரேஷன் அரிசியைக் கடத்தி சென்றவர்கள் யார்? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவிற்கு நாளுக்கு நாள் நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்தும் சம்பவத்தால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in