

ஒவ்வொரு மருத்துவ இடமும் பலருக்குப் பெரிய வருவாயாக இருந்தது. தேசிய அளவில் நமது மருத்துவ மாணவர்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு மிகப்பெரிய தீர்வாகும். நீதி கிடைக்கப் போராடிய அனைவருக்கும் நன்றி என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள் சட்ட விரோதமாகச் சேர்க்கப்பட்டனர். இந்த மாணவர்களைக் கல்லூரிகளில் இருந்து நீக்கி, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களைக் கல்லூரியில் சேர்த்த புதுச்சேரியில் உள்ள ஆறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்துப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று வெளியிட்ட அறிக்கை:
''தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ சேர்க்கைகள் சரியாக உள்ளதா என்பது நீதிமன்றங்களால் கவனிக்கப்படுகிறது. நல்ல நோக்கத்துடன் செய்யும் எந்தப் பணியும் வீணாகாது.
ஒவ்வொரு மருத்துவ இடமும் பலருக்குப் பெரிய வருவாயாக இருந்தது. சிலர் சட்ட விரோத செயல்களில் தைரியமாகச் செயல்பட்டாலும், மற்றவர்கள் பயப்படுகிறார்கள். சிலரோ சந்தேகத்துக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.
நாம் எப்போதும் சரியானதைச் செய்யத் தயங்கவே கூடாது. இயற்கை நமக்கு உதவும். புதுச்சேரி சுகாதாரத்துறை முன்னாள் செயலர் கந்தவேலு, இந்த நிகழ்வில் சரியாகச் செயல்பட்டார். எதிர்மறையான அரசியல் நிகழ்வுகளைத் தைரியமாக எதிர்கொண்டார். விரோதப் போக்கில் செய்யப்பட்ட நிர்வாகத் தலையீடுகளின் இறுதியில் சரியான தீர்வை முன்னாள் செயலர் வழங்கினார். அந்தப் பணியும் தற்போதைய உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியாகியுள்ளது.
நமது மருத்துவ மாணவர்களுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு தேசிய அளவில் மிகப்பெரிய ஒன்றாகும். நீதி கிடைக்கப் போராடிய அனைவருக்கும் நன்றி. சிபிஐ விசாரணை இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு இது ஒரு தீபாவளிப் பரிசு''.
இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.