

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பிரவச வலியால் துடித்த பெண்ணுக்கு, கரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவனையில் சுகப் பிரசவம் நிகழ்ந்துள்ளது.
கோவை நீலிக்கோணம்பாளையத்தைச் சேர்ந்த 27 வயதுப் பெண், பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார். தொடர் பரிசோதனைக்காக நேற்று (அக். 7) அந்த தனியார் மருத்துவனைக்குச் சென்றபோது கர்ப்பிணியைப் பரிசோதித்த மருத்துவர், இன்னும் 3 நாட்களுக்குள் பிரசவமாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், வீட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு, இன்று (அக். 08) காலை 9.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே பரிசோதனை மேற்கொண்டு வந்த தனியார் மருத்துவமனைக்குக் கர்ப்பிணியை காரில் அழைத்துச் செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.
அவ்வாறு அழைத்துச் செல்லும் வழியில் பிரசவ வலியால் அந்தப் பெண் அலறித் துடித்துள்ளார். உடனடியாக என்ன செய்வதென்று தெரியாது திகைத்த உறவினர்கள், செல்லும் வழியில் கரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டுவரும் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குக் கர்ப்பிணியை அழைத்துச் சென்றனர்.
அங்கு கர்ப்பிணியைப் பரிசோதித்த இ.எஸ்.ஐ மருத்துவமனை செவிலியர்கள், பனிக்குடம் உடைந்து குழந்தையின் தலை வெளியில் தெரிவதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, துரிதமாகச் செயல்பட்டு பிரசவம் பார்த்ததில், காலை 9.38 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. செவிலியர்களின் இந்தத் துரிதச் செயல்பாட்டுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், "பிறந்த குழந்தை 2.85 கிலோ கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. தாயும் நலமாக உள்ளார். பெண்ணுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளாத காரணத்தால் தனிப்பிரிவில், தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், கரோனா சிறப்பு மருத்துவமனையாக இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்படுவதால், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்கள் விருப்பத்தின்பேரில் தாயும், குழந்தையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்றார்.