

மதுரை மாசி வீதிகளில் பாதாளசாக்கடை பணி, புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் ஸ்மார்ட் சிட்டிப்பணிகளுக்காக சாலைகளில் குழி தோண்டி போடப்பட்டுள்ளதால் தினமும் காலை முதல் இரவு வரை ஒட்டுமொத்த போக்குரவத்தும் ஸ்தம்பிப்பதால் ஷாப்பிங் செல்லும் மக்கள் தவிக்கின்றனர்.
அதனால், தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் புதுப்பொலிவுபடுத்தப்படுகிறது.
புதிய பேவர் பிளாக் சாலைகள், பாதாளசாக்கடை அமைக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டாக நடக்கிறது. கரோனா ஊரடங்கால் இடையில் 5 மாதம் பணிகள் நடக்காததால் இப்பணிகள் தற்போது வரை நிறைவடையவில்லை.
மாசி வீதிகள், விளக்குதூன், வெண்கலக்கடை தெரு உள்ளிட்ட மீனாட்சிம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில்தான் மதுரையின் ஒட்டுமொத்த வர்த்தகமும் நடக்கிறது.
நகைக்கடைகள், ஜவுளி நிறுவனங்கள், ஹார்டுவேர் கடைகள், வீட்டு உபயோக நிறுவனக் கடைகள், எலக்ட்ரிக் கடைகள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் ஷாப்பிங் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்களும், கடைகளும் இப்பகுதியில் செயல்படுகின்றன.
அதனால், மதுரைக்கு சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர் மக்களும் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள இந்த வீதிகளில்தான் தினமும் ஷாப்பிங் செல்வார்கள்.
அதனால், ஆண்டு முழுவதுமே திருவிழாபோல் இந்த சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். பண்டிகை காலங்களில் இந்த வீதிகளில் நடக்கவே முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.
கரோனா ஊரடங்கதால் இந்த வீதிகளில் கடைகள் மூடப்பட்டதால் மதுரையின் ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களை நம்பி வேலைவாய்ப்பு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
சிறு, குறு வியாபாரிகள் வாழ்வாரத்தை இழந்து தவித்தனர். ஊரடங்கு தளர்வால் தற்போது மீண்டும் மீனாட்சியம்மன் கோயில் பகுதி வணிக நிறுவனங்கள், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் சரஸ்வதி பூஜை, நவராத்திரி பண்டிகை, தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஜவுளிக்கடைகளில் வியாபாரம் களைகட்டத்தொடங்கியுள்ளன.
அதனால், காலை, மாலை நேரங்களில் மாசிவீதிகள் மட்டுமில்லாது கோயியை சுற்றியுள்ள மற்ற சாலைகளிலும் வழக்கத்திற்கு மாறாக வாகனப்போக்குவரத்தும், மக்கள் வருகையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
ஆனால், மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கி நடப்பதால் பாதாள சாக்கடைக்காகவும், சாலையை அகலப்படுத்தி பேவர் பிளாக் சாலை அமைக்கவும் பணிகள் நடக்கின்றன.
இந்த பணிகளுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டி போடப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் வராததால் பணிகள் மந்தமாக நடக்கிறது. அதனால், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் ஷபாப்பிங் வரும் மக்களும், நடந்து வரும் மக்களும் இந்த சாலைகளை கடந்து செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர்.
மழை காலத்தில் தண்ணீர் தெப்பம்போல் தேங்கி சாலை எது பள்ளம் எது எனத் தெரியாமல் மக்கள் வாகனங்களுடன் கீழே விழுந்து செல்கின்றனர்.
மழையில்லாவிட்டால் தோண்டிய பள்ளத்தில் இருந்து புழுதி பறப்பதால் மக்கள் நிம்மதியாக பொருட்கள் வாங்குவரச் செல்ல முடியவில்லை. கடைகளில் வைத்திருக்கும் பொருட்களும் புழுதிப்பட்டு பாழாகின்றன. ஷாப்பிங் செல்லும் மக்கள்,
ஒவ்வொரு சாலையையும் கடக்கவே அரை மணி நேரத்திற்கு மேலாகிறது. மக்கள் நிம்மதியாக ஷாப்பிங் செல்ல முடியாமலும், சாலைகளை கடந்து செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
ஏற்கெனவே கரோனா ஊரடங்கால் 6 மாதத்திற்கு மேலாக வியாபாரம் பாதிக்கப்பட்டு வியாபாரிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு தளர்வால் நிம்மதியாக தீபாவளி வியாபாரம் பார்க்கலாம் என்று நினைத்தால் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உருவத்தில் ஷாப்பிங் வரும் மக்கள் படாதப்பாடு படுவதால் பண்டிகைகால வியாபாரம் பாதிக்கப்படுமோ என்று வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்திற்கு தற்போது ஏராளமான உள்ளூர், வெளிமாவட்ட பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். அவர்கள், ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கும் இந்த சாலைகளில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அதனால், ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க மாசி வீதி வியாபாரிகளும், பொதுமக்களும் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.