

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் விஷம் குடித்த சிறுவனை 65 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றிய சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களை டீன் பாராட்டினார்.
தேவகோட்டை சிதம்பரநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்த ராமதாஸ் மனைவி பிரியதர்ஷினி (36). இவர் குடும்பப் பிரச்சினையில் ஆக.3-ம் தேதி தனது மகள் பர்வதவர்த்தினி (16), மகன்கள் திருநீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (12) ஆகியோருக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தினார்.
இச்சம்பவத்தில் பிரியதர்ஷினி, பர்வதவர்த்தினி, திருநீலகண்டன் ஆகியோர் இறந்தனர். ஆபத்தான நிலையில் ஹரிகிருஷ்ணன் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு குழந்தைகள் நலப்பிரிவுத் தலைவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அச்சிறுவனுக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளித்ததோடு, பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 65 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறுவன் குணமடைந்தார்.
அவரை காப்பாற்றிய குழந்தைகள் நலப்பிரிவுத் தலைவர் சிவக்குமார், மருத்துவர்கள் ராஜா, கொன்னடியாண்டி, செந்தில்குமார், ராஜ்குமார், பரமகுரு, பேபிபிரவீனா, ஷ்யாம்ஆனந்த், பெரியசாமி, விசாலாட்சி, செல்வவிநாயகம், மயக்கவியல் துறைத் தலைவர் வைரவராஜன், காது,மூக்கு,தொண்டை துறைத் தலைவர் நாகசுப்ரமணியன் ஆகியோரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் பாராட்டினார்.
இதுகுறித்து குழந்தைகள் நலப்பிரிவுத் தலைவர் சிவக்குமார் கூறுகையில், ‘‘ எலிபேஸ்ட், பூச்சிக்கொல்லி மருந்து இரண்டையும் கலந்து குடித்துள்ளனர்.
விஷம் அதிகம் என்பதால் அச்சிறுவனை காப்பாற்றுவது சவாலாக இருந்தது. செப்.21-ம் தேதி தான் வென்டிலேட்டர் உதவியின்றி சுவாசிக்க தொடங்கினான். தொடர்ந்து அச்சிறுவனுக்கு பேச்சு, மனநல பயிற்சி மற்றும் ஆலோசனையும் அளிக்கப்பட்டன,’’ என்று கூறினார்.