

திருநெல்வேலியில் காரில் கொண்டு சென்ற ரூ.60.10 லட்சம் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
காரில் இருந்த 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவரும் நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
திருநெல்வேலி டவுன் ரதவீதிகளில் ஜவுளி கடைகள் தொடங்கி தங்க நகை கடைகள் பலசரக்கு கடைகள் அதிகமுள்ளன.
குஜராத் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பலரும் கவரிங் நகைக் கடைகள், நோட்டுபுத்தகக் கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் டவுன் ரதவீதியிலிருந்து காரில் பெருமளவுக்கு பணம் எடுத்து செல்லப்படுவதாக இன்று அதிகாலையில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் டவுன் ரதவீதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த காரை வழிமறித்து சோதனையிட்டதில் அதில் ரூ.60,10,280 ரொக்கம் இருந்தது.
அந்த காரில் வடமாநில வியாபாரிகள் பத்தேசந்த், ஜெயந்திலாலும், திருநெல்வேலியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், தென்காசியை சேர்ந்த கல்யாணகுமார் ஆகிய 4 பேர் இருந்தனர்.
அவர்களை டவுன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். காரில் இருந்த ரொக்கம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்துக்கு உரிய கணக்கு விவரங்களையும், ஆவணங்களையும் காரில் இருந்தவர்கள் போலீஸாரிடம் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து போலீஸார் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துவிடுவோம். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவார்கள்.
சரியான ஆவணங்களை கொடுத்தால் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். இல்லையென்றால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.