மயிலாடுதுறையில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைப்பு: கொள்ளிடத்தில் தொடக்கம்

மயிலாடுதுறையில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைப்பு: கொள்ளிடத்தில் தொடக்கம்
Updated on
1 min read

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் பனை விதைகள் விதைக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

சீர்காழியில் இயங்கிவரும் 'நலம்' என்னும் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் கலந்து கொண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி, சீர்காழி நகராட்சி, கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றியங்களில் உள்ள 16 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று, கொள்ளிடம் ஒன்றியம் ஆரப்பள்ளம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா முருகானந்தம் தலைமையில் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. இதில் சீர்காழி வட்டாட்சியர் ஜி.ரமாமணி கலந்துகொண்டு பனை விதையை நட்டுவைத்துத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆரப்பள்ளம் ஊராட்சியில் மட்டும் 20 ஆயிரம் பனை விதைகள் நடத் திட்டமிடப்பட்டு உள்ளதாக, ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா முருகானந்தம் தெரிவித்தார்.

'நலம்' அறக்கட்டளையுடன் இணைந்து கொள்ளிடம் ஒன்றியத்திலுள்ள ஆலாலசுந்தரம், ஆச்சாள்புரம், முதலைமேடு, அளக்குடி, புளியந்துறை, மகேந்திரபள்ளி, அரசூர் ஆகிய ஊராட்சிகளிலும் பனை விதைப்பு நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in