Last Updated : 08 Oct, 2020 04:11 PM

 

Published : 08 Oct 2020 04:11 PM
Last Updated : 08 Oct 2020 04:11 PM

சகோதரரின் காதல் திருமணத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்: மறு பிரேத பரிசோதனைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இறந்த இளைஞரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பேரையூரைச் சேர்ந்த சந்தோஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். புனிதாவின் குடும்பத்தினர் சாப்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் செப். 16-ல் எனது தம்பி ரமேஷை, சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதிய ராஜா ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ரமேஷ் வீடு திரும்பவில்லை. மறுநாள் அதிகாலையில் வீட்டிலிருந்து 300 அடி தொலைவில் ஒரு மரத்தில் தூக்கில் ரமேஷின் சடலம் தொங்கிக் கொண்டிருந்தது.

போலீஸார் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியதால் ரமேஷ் உயிரிழந்துள்ளார். மாலை 4 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என விதியுள்ள போது ரமேஷின் உடல் மாலை 5.30க்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே, ரமேஷின் உடலை மதுரை, தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த தடயவியல் துறை பேராசிரியர்களை கொண்ட குழுவை நியமித்து மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மனுதாரரின் சகோதரர் சட்டவிரோதக் காவலில் மரணம் அடைந்தார் என புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையை முழுமையாக ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை.

தடயவியல் துறை சேர்ந்த மருத்துவர்கள் இல்லாமல் சாதாரண மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ள என்ன அவசியம் வந்தது? தேனி அல்லது மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடலை கொண்டுச் செல்லாமல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

பின்னர், தடயவியல் துறையை சேர்ந்த மூத்த மருத்துவர் மதிகரன் முன்னிலையில் நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் செல்வமுருகன், பிரசன்னா ஆகியோர் மனுதாரர் சகோதர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

அதை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மனுதாரர் தரப்பில் பிரேத பரிசோதனையை புகைப்படம் மற்றும் வீடியோவில் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டார்.

தமிழகத்தில் பிரேத பரிசோதனை தொடர்பாக உரிய விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 13ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x