Published : 08 Oct 2020 03:09 PM
Last Updated : 08 Oct 2020 03:09 PM

கட்டுமானப் பணி நிறைவுச் சான்று இல்லாவிட்டாலும் மின் இணைப்பு; விதிமீறும் கட்டிடங்களுக்கு தமிழக அரசு துணைபோகும் காரணமென்ன?- கனிமொழி கண்டனம்

சென்னை

விதியை மீறிக் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் இல்லை என்ற அரசாணையைத் தளர்த்தி, கட்டுமானப் பணி நிறைவுச் சான்று இல்லாவிட்டாலும் மின் இணைப்பு என மின்சார வாரியம் முடிவெடுத்திருப்பது விதிமீறல் கட்டிடம் கட்டுபவர்களை ஊக்குவிக்கும் செயல் என கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீடு, வணிக வளாகம், தொழில் வளாகம் உள்ளிட்ட அனைத்து வகை கட்டிடங்களைக் கட்டுவதற்கும், அதன் சதுர அடி பரப்புக்கு ஏற்ப, உள்ளாட்சி நிர்வாகத்திடமோ அல்லது உள்ளூர் திட்டக் குழுமத்திடமோ விண்ணப்பித்து கட்டிட அனுமதி எண் பெற வேண்டும். ஆனால், ஒரு வரைபடத்தைக் காட்டி ஒப்புதல் பெற்றுவிட்டு, அதற்கு மாறாக விதியை மீறிக் கட்டிடங்கள் கட்டப்படுவதாக அரசுக்குப் புகார்கள் சென்றன.

இதைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில், ‘‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்’’ உருவாக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி, கட்டிடங்களைக் கட்டியவர்கள், உள்ளாட்சி நிர்வாகம் அல்லது உள்ளூர் திட்டக் குழுமத்திடம் இருந்து ‘‘அனுமதிக்கப்பட்ட முறையில்தான் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது,’’ என கட்டிட நிறைவுச் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால் மட்டுமே அந்தக் கட்டிடத்துக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில், 12 மீட்டர் உயரத்துக்குள் கட்டப்பட்ட, 3 வீடுகளைக் கொண்ட, 8,072 சதுரடிக்கு உட்பட்ட குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கு ‘நிறைவுச் சான்றிதழ்’ பெறத் தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவின் காரணமாக, விதிகளை மீறிக் கட்டப்பட்ட குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை அல்லாத கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு கிடைப்பது தடுக்கப்பட்டது. விதியை மீறிக் கட்டியவர்களால் அனுமதி பெற முடியவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கும் கடந்த 6-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘‘கட்டிட நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் என்ற அரசாணைக்கு முன் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளைப் பின்பற்றி, அனைத்துக் கட்டிடங்களுக்கும் மின் இணைப்புகளை வழங்கலாம்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விதிமீறல் கட்டிடங்களை ஊக்குவிப்பது போல உள்ளதாகப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திமுக மாநில மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி மின் வாரியத்தின் இத்தகைய உத்தரவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சி முடிய 6 மாதங்கள் உள்ளதால் வசூலை வாரிக்குவிக்க அரசாணையை நீக்கியுள்ளீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கனிமொழியின் ட்விட்டர் பதிவு:

“கட்டுமானப் பணி நிறைவுச் சான்று இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது என்ற ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன ? இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறிக் கட்டிடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை ?

ஆட்சி முடிய இன்னும் ஆறே மாதங்கள் இருப்பதால் அதற்குள் வசூலை அதிகரிக்கும் பொருட்டா ?

நகர்ப்புறங்களில் விதிகளை மீறிக் கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளைக் கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது”.

இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x