

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக ஆளுநரிடம் மனு அளித்துள்ளது.
கடுமையான எதிர்ப்புக்கு இடையே புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் பள்ளிகளைத் திறக்கக்கூடாது என அதிமுக வலியுறுத்தியுள்ளது
இதற்காக அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அன்பழகன் உப்பளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், "யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மக்களுடைய உயிர் சம்பந்தமான பிரச்சனையில் ஆளும் அரசு தவறான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் துணை நிலை ஆளுநருக்கு உண்டு. அந்த வகையில் மாணவர்களுடைய உயிரோடு விளையாடும் புதுச்சேரி அரசின் பள்ளிகள் திறப்பு சம்பந்தமான முடிவில் தாங்கள் தலையிட்டு, பள்ளிகள் திறப்பதை தங்களுக்குள்ள அதிகாரத்தின்படி உடனடியாக நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படுகின்றதோ, அதற்கு ஏற்றாற்போல் நம் மாநிலத்தில் மாணவர்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பள்ளிகள் திறக்க தாங்கள் அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, கல்வியில் தமிழகத்தைப் புதுச்சேரி அரசு பின்பற்றுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மறுமுடிவு எடுக்கும்போது புதுச்சேரி அரசும் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.