

சென்னையில் நோய்த்தொற்று குறைந்து வருவதை, நோயே இல்லை என அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். இந்த 2 மாதங்கள் கடினமாக இருக்கும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் சுகாதாரத்துறைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:
''காய்ச்சல் முகாம்கள் ஏப்ரல் தொடங்கி இன்னும் சில மாதங்களுக்குத் தொடரும். இன்றைய தினம் வரை 57,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தி முடித்து 29 லட்சம் மக்கள் பயன்பெற்று அவர்களின் அனைத்து தரவுகளையும் சேகரித்து அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து வருகிறோம். கூடுதல் மருத்துவர்கள், கூடுதல் செவிலியர்கள் மக்களுக்குச் சேவை செய்து வருகின்றனர்.
முகாம் மூலம் பல நன்மைகள் கிடைத்துள்ளன. தினந்தோறும் நடத்துவதால் பொதுமக்களை எளிதாக அணுக முடிந்துள்ளது. இந்தக் காய்ச்சல் முகாமுக்காகத்தான் சுதந்திர தின விழாவில் முதல்வர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். இன்னும் 2 அல்லது 3 மாதத்திற்கு இதே வேகத்தில் செயல்பட்டால்தான் நோய்த்தொற்றைக் குறைக்க முடியும் என்பது எங்கள் எண்ணம். இதையே உலக வல்லுநர்கள், மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது இல்லாமல் வீட்டுத் தனிமையில் இருந்தவர்கள் 30 லட்சம் பேர் ஆவர். அவர்களது தரவுகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் இரண்டே கால் லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். 6 சுழற்சிகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முதலில் 6 சுழற்சிகள் என்று சொல்லியிருந்தோம். தற்போது தனிமைப்படுத்துதல் வெற்றிகரமான பங்கை ஆற்றுகிறது.
தனிமைப்படுத்துதலில் என்ன முக்கியமான விஷயம் என்றால், தொற்று உள்ளவர்களை வெளியேவிட்டால் அவர்கள் நோய் பரப்புபவர்களாக மாறுவார்கள். அதனால் அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தினால் அவர்கள் மூலம் நோய்ப் பரவல் தடுப்பது சாத்தியமானது.
ஜூன் 19-ம் தேதி சிறப்புக் கூட்டத்தில் பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இருமடங்கு, மும்மடங்காக பரிசோதனை அதிகரிக்கப்பட்டு சற்றேறக்குறைய 16 லட்சம் பொதுமக்களுக்குப் பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன.
இது சென்னை மாநகராட்சி மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும். அதாவது 5-ல் ஒருவரை சோதித்து முடித்துள்ளோம். அதே வேகத்தில் அதைவிடக் கூடுதலாக பரிசோதனை செய்கிறோம். இதே ரீதியில் பரிசோதனை செய்தால்தான் கடைசித் தொற்று உள்ள நபரைக் கண்டறிய முடியும். இதன் நோக்கம் தொற்று பாசிட்டிவ் விகிதத்தை 9-லிருந்து 5 ஆகக் குறைப்பதே.
இந்த விஷயத்தைச் சொல்லும்போது எங்களுக்குச் சவாலாக இருக்கும் விஷயம் என்னவென்றால் சென்னை மக்கள் முகக்கவசம் அணிவதில் சமீபகாலமாக அலட்சியமாக இருந்து வருகிறார்கள். பத்திரிகைகள், பிரச்சாரம் காரணமாக ஆரம்பத்தில் சரியாக முகக்கவசம் அணிந்த சென்னை மக்கள் சமீப மாதங்களில் மிக அலட்சியமாக இருப்பதைக் காண முடிகிறது. பார்த்துக்கொள்ளலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை எனும் போக்கு மக்களிடம் அதிகரிக்கிறது. இது மிக மிக ஆபத்தான விஷயம்.
ஊடகங்கள் இதைத் திரும்பத் திரும்ப மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். இதை சரியாகக் கடைப்பிடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். தற்போது நோய்த்தொற்று குறைய வாய்ப்புகள் அதிகரிக்கும் நேரத்தில் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பது ஆபத்தானது.
நோய்த் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள் என்பதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல. தற்போதுள்ள ஒரே தடுப்பு மருந்து முகக்கவசம் அணிவதுதான். முகக்கவசம் அணிவதை ஒரு நிமிடம் கூட அலட்சியமாக தள்ளிப்போடக் கூடாது. யாருக்கு வேண்டுமானாலும் இந்தத் தொற்று ஏற்படும். ஆகவே அந்த ஆபத்து நீங்க வேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் எந்த வயதினராக இருந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
இதைக் கட்டாயம் தொடர்ந்து 3 மாதங்களுக்காவது அணிய வேண்டும். அதேபோன்று முகக்கவசம் அணிபவர்கள் அதிக விலையுள்ள என்.95 போன்ற முகக்கவசம் அணிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சாதாரணமாக காட்டன் முகக்கவசத்தை அணியலாம். அதைத் துவைத்துத் திரும்பப் பயன்படுத்தலாம்.
நாம் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றுவிட்டு வந்தால் நம் வீட்டிலோ, அண்டை வீட்டிலோ இருக்கும் வயதானவர்கள், நீண்ட நாள் நோய் பாதிப்புள்ளவர்களைப் பாதிக்கும். கிட்னி சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருக்கலாம். நமது செயல் அவர்களைப் பாதிக்கலாம். சில நேரம் சிலரது உயிரிழப்புக்கும் நாம் காரணமாகிவிடக்கூடும்.
முகக்கவசம் மிக முக்கியமான ஒன்று என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இதைக் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும் என அபராதம் விதிக்கப்பட்டு இரண்டே கால் கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளோம். அபராதம் விதித்து வசூலிக்கும் நோக்கமில்லை. ஆனால், ஒரு நபரால் பல நபர்களுக்குப் பரவக்கூடாது என்பதே நோக்கம்.
இனியும் நடவடிக்கைகளைக் கடுமையாக்க உள்ளோம். காவல்துறை, மருத்துவத் துறையுடன் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளோம். அக்டோபர், நவம்பர் மாதங்கள் கடினமான காலகட்டம். அதனால் நடவடிக்கை கடுமையாக இருந்து கட்டுப்பாட்டுடன் நடந்தால் மட்டுமே தடுக்க முடியும்.
இனியும் நடவடிக்கை கடுமையாக இருக்கும். உதாரணமாக ஒரு உணவகம் இருக்கிறது, அவர்கள் சரியாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு மாதம் வரை மூட எங்களுக்கு அதிகாரம் உள்ளது. அரசு பொருளாதாரப் பிரச்சினை உள்ளதால்தான் நிறைய தளர்வுகள் கொடுத்துள்ளது. அதை நல்ல முறையில் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட வேண்டும்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பேசினார்.