

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.2.39 கோடி மோசடி செய்த சங்கத் துணைத் தலைவர் உள்பட 6 பேரை நாமக்கல் வணிகவியல் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவான 7 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் நிறுவனத்தினர் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களுக்குப் பயிர்க் கடன் வழங்குதல் உள்ளிட்டவற்றில் போலி ஆவணங்களைப் பதிவு செய்து ரூ.2.39 கோடி வரை மோசடி நடைபெற்றதாக மாவட்ட துணை பதிவாளர் வெங்கடாசலம் நாமக்கல் வணிகவியல் குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.
இதன்பேரில் கூட்டுறவுக் கடன் சங்கத் துணைத் தலைவர் தங்கவேல் (60) உள்பட 6 பேரை இன்று (அக். 08) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள சங்க முன்னாள் தலைவர் உள்பட 7 பேரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.