புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க பாஜக முயல்வதாக முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு; தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி கிரண்பேடியிடம் புகார்

ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்த பாஜகவினர்.
ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்த பாஜகவினர்.
Updated on
1 min read

புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க பாஜக முயல்வதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளது பொய்ப் பிரச்சாரம் எனக் குறிப்பிட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜகவினர் மனு தந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் நடந்த தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசும்போது, "புதுவையைத் தமிழகத்தோடு இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்" என்று குற்றம் சாட்டினார். இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (ஆக். 08) ஆளுநர் மாளிகை நோக்கி பாஜனகவினர் ஊர்வலம் நடத்தினர். காமராஜர் சாலை - நேரு வீதி சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், எம்எல்ஏக்கள் சங்கர், செல்வகணபதி முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தது. தலைமைத் தபால் நிலையம் முன்பு காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை சென்று மனு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், "ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டைத் திட்டமிட்டு நாராயணசாமி பரப்புகிறார். ஆதாரம் இருந்தால் நாராயணசாமி தரலாம். அவர் சொல்வது பொய். அவர் கூறுவதுபோல் இணைப்பு தொடர்பாக எதுவும் நடக்கவில்லை. நாராயணசாமி பதவி விலக வேண்டும். அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு மனு தந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in