

9 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி அமுதசுரபி ஊழியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டதால் பேரவை வாயில் மூடப்பட்டது. காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுவை அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரி அமுதசுரபி அனைத்து தொழிற்சங்கத்தினரும் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கந்தசாமி, அமுதசுரபி ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை தரவில்லை.
இந்நிலையில், காந்திவீதி அமுதசுரபி தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக சட்டப்பேரவையை நோக்கி இன்று (அக்.08) வந்தனர். அப்போது சட்டப்பேரவைக்கு அருகில் தடுப்புகளுடன் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், ஊழியர்கள் அவற்றைத் தள்ளிவிட்டுவிட்டு சட்டப்பேரவையை நோக்கி முன்னேறினர்.
காவல் துறையினர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சட்டப்பேரவை நுழைவுவாயில் முன்பு ஊழியர்கள் வந்தனர். சட்டப்பேரவைக் காவலர்கள் பேரவை நுழைவுவாயிலை மூடினர். அப்போது ஊழியர்களில் சிலர் நுழைவுவாயிலில் ஏறி உள்ளே செல்ல முயன்றனர். இதையடுத்து, பேரவையைக் காவலர்கள் பூட்டினர். தகவலறிந்த காவல் துறையினர் சட்டப்பேரவை முன்பு குவிக்கப்பட்டனர்.
நுழைவுவாயில் முன்பு அமுதசுரபி ஊழியர்கள் தரையில் அமர்ந்து சம்பளம் வழங்கக் கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. காவல் துறையினர் அவர்களைக் கலைந்துபோகும்படி கூறியதால் ஊழியர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் ஊழியர்களை வாகனத்தில் ஏற்றி கைது செய்து அப்புறப்படுத்தினர்.