தருமபுரியில் தொடர் மழை எதிரொலி; எர்ரப்பட்டி ஏரி நிறைந்து உபரிநீர் வெளியேற்றம்: ஏரிக்கரையில் கிராம மக்கள் வழிபாடு

தருமபுரி அடுத்த எர்ரப்பட்டியில் ஏரி நிறைந்து கோடி வாய்க்கால் பகுதியில் வெளி யேறும் தண்ணீர்.
தருமபுரி அடுத்த எர்ரப்பட்டியில் ஏரி நிறைந்து கோடி வாய்க்கால் பகுதியில் வெளி யேறும் தண்ணீர்.
Updated on
1 min read

தொடர் மழையால் தருமபுரி அடுத்த எர்ரப்பட்டி ஏரி நிறைந்ததால் கிராம மக்கள் ஏரிக்கரைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை அருகில் உள்ளது எர்ரப்பட்டி கிராமம். இங்கு சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 2018-ம் ஆண்டில் நிறைந்தது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்த கனமழை காரணமாக எர்ரப்பட்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு எர்ரப்பட்டி ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

ஏற்கெனவே, ஏரியின் பெரும்பகுதி அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் ஏரி நிரம்பியது. நேற்று அதிகாலை எர்ரப்பட்டி ஏரி முழுமையாக நிறைந்து கோடி வாய்க்கால் வழியாக உபரிநீர் வெளியேறத் தொடங்கியது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர் அடுத்துள்ள ஒட்டப்பட்டி ஏரியை நோக்கி வாய்க்கால் வழியாக செல்லத் தொடங்கியது.

ஏரி நிரம்பிய தகவல் அறிந்து சுற்று வட்டார கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து ஏரியை பார்த்துச் சென்றனர். நீர்நிறைந்து காணப்படும் எர்ரப்பட்டி ஏரிக்கு மரியாதை செய்யும் சுற்று வட்டார பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் நேற்று ஏரி கோடிக்கரை பகுதியில் பூஜை செய்து வழிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in