

கோவையில் விசைத்தறி கூடத்தால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த சி.பழனிசாமி என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருப்பதாவது:
கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில், உரிய சுற்றுச்சூழல் அனுமதி இன்றி விசைத்தறி கூடம் செயல்பட்டுவருகிறது. முதலில் 2 விசைத்தறிகளுடன் தொடங்கிய கூடம், தற்போது 16 விசைத்தறிகளுடன் செயல்பட்டுவருகிறது. இது 24 மணி நேரமும் இயக்கப்பட்டு, காற்று மாசு, ஒலி மாசு ஆகியவற்றை ஏற்படுத்துவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, தொடர்புடைய விசைத்தறி கூட நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரரின் புகார் குறித்து ஆய்வு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இக்குழு, தொடர்புடைய நிர்வாகத்தினர், விசைத்தறி கூடம் நடத்த முறையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளனரா, தொடர்புடைய பகுதி நகர மற்றும் ஊரமைப்பு சட்டத்தில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது, அந்த நிறுவனம் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறதா, இரவு மற்றும் பகல் நேரத்தில் காற்று மாசு எவ்வளவு உள்ளது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், அதை குறைப்பதற்கான ஆலோசனைகள், விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பை சீரமைப்பதற்கு விதிக்க வேண்டிய அபராத தொகையின் அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்து, மனு மீதான அடுத்த விசாரணை நாளான நவம்பர் 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.