கட்டிட நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் இல்லை மின்வாரியத்தின் உத்தரவால் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும்?

கட்டிட நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் இல்லை மின்வாரியத்தின் உத்தரவால் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும்?
Updated on
1 min read

கட்டிட நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்ற மின் வாரியத்தின் உத்தரவால் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும் என சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வீடு, வணிக வளாகம், தொழில் வளாகம் உள்ளிட்ட அனைத்து வகை கட்டிடங்களை கட்டுவதற்கும், அதன் சதுரடி பரப்புக்கு ஏற்ப, உள்ளாட்சி நிர்வாகத்திடமோ அல்லது உள்ளூர் திட்டக் குழுமத்திடமோ விண்ணப்பித்து கட்டிட அனுமதி எண் பெற வேண்டும். ஆனால் ஒரு வரைபடத்தை காட்டி ஒப்புதல் பெற்றுவிட்டு, அதற்கு மாறாக கட்டிடங்கள் கட்டப்படுவதாக அரசுக்கு புகார்கள் சென்றன.

இதைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில்,‘‘ தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்’’ உருவாக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, கட்டிடங்களை கட்டியவர்கள், உள்ளாட்சி நிர்வாகம் அல்லது உள்ளூர் திட்டக் குழுமத்திடம் இருந்து ‘‘அனுமதிக்கப்பட்ட முறையில்தான் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது,’’ என கட்டிட நிறைவுச் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால் மட்டுமே அந்த கட்டிடத்துக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், 12 மீட்டர் உயரத்துக்குள் கட்டப்பட்ட, 3 வீடுகளை கொண்ட, 8,072 சதுரடிக்கு உட்பட்ட குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கு ‘நிறைவுச் சான்றிதழ்’ பெறத் தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் காரணமாக, விதிகளை மீறி கட்டப்பட்ட குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை அல்லாத கட்டிடங்களுக்கு மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கும் கடந்த 6-ம்தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘கட்டிட நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவுக்கு முன்னர் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளை பின்பற்றி, அனைத்து கட்டிடங்களுக்கும் மின் இணைப்புகளை வழங்கலாம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விதிமீறல் கட்டிடங்களை ஊக்குவிப்பது போல உள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் கூறியதாவது: விதிகளை மீறி, கட்டப்படும் கட்டிடங்களுக்கு கடிவாளம் போட, உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தமிழக அரசு, கட்டிட நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் என அறிவித்தது. ஆனால், இதை மீறும் வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சுற்றறிக்கை உள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக, விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியவர்கள் மீண்டும் மேற்கண்ட சலுகைகளை பெற்றுவிடுவர். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். உரிய நடவடிக்கை இல்லையென்றால், நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in