Last Updated : 08 Oct, 2020 07:48 AM

 

Published : 08 Oct 2020 07:48 AM
Last Updated : 08 Oct 2020 07:48 AM

ஆக்கிரமிக்கும் குடியிருப்புகளால் பிரணவ மலையின் பாரம்பரிய அடையாளங்கள் அழியும் அபாயம்: ஆவணரீதியாக தொல்லியல் துறைக்கு மாற்ற நடவடிக்கை

திருப்போரூரில் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள பிரணவ மலையில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளால் பாரம்பரிய அடையாளங்கள் அழிந்துவரும் நிலையில், மலை அமைந்துள்ள நிலப்பகுதி பட்டா ஆவணங்களை தொல்லியல் துறையின் முழு அதிகாரத்துக்கு மாற்றினால் மட்டுமே, எஞ்சிய அடையாளங்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள பிரணவ மலையில் பழங்கால கல்வெட்டுகள், நமது மூதாதையர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் நிறைந்துள்ளதால், இம்மலையை தொல்லியல் துறை பராமரிக்கிறது.

இந்நிலையில், மலையை ஆக்கிரமித்து கட்டப்படும் குடியிருப்புகளை அகற்றும்படி தொல்லியல் துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 85-க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது, ஆக்கிரமிப்பாளர்கள் மலையின் மீது கான்கிரீட் தூண் அமைத்து குடியிருப்புகளை விரிவுபடுத்தி வருகின்றனர். இதனால், வரலாற்று ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதுகுறித்து, வரலாற்று ஆர்வலர் சந்திரசேகரன் கூறியதாவது: அரசியல்வாதிகளின் ஆதரவோடு ஆக்கிரமிப்பாளர்கள் மலையில் குடியிருப்புகளை விரிவுபடுத்தி வருகின்றனர். எனவேஇம்மலையை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரணவ மலைப் பகுதி அமைந்துள்ள நிலங்கள் மாநில அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ளதால் அரசியல்வாதிகளின் ஆதரவோடு ஆக்கிரமிப்பாளர்கள் முறைகேடாக பட்டா பெற்றுவிடுகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, மாவட்டநிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால், மலைப்பகுதி நிலங்களை ஆவணங்கள்ரீதியாக தொல்லியல் துறையின் முழு அதிகாரத்துக்கு மாற்றியமைத்தால் மட்டுமே, பட்டா வழங்குவதை தடுக்கமுடியும். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x