

மின்சார பயன்பாடுகளில் முறைகேடுகளை தடுக்க, மாதம்தோறும் 2,500 மின்இணைப்புகளில் ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் 100 யூனிட்கள் இலவசமாகவும், 500 யூனிட்கள் வரை மானிய விலையிலும் தமிழக அரசு வழங்கி வருகிறது. 500 யூனிட்டுக்கு மேல் மின்பயன்பாடு சென்றால் முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
மின்பயன்பாடு 500 யூனிட்டை கடந்த வீடுகளில், அந்த வீட்டு உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மின்பயன்பாட்டு அளவை குறைத்து கணக்கிடுவது, வீடுகளுக்கு நேரில்செல்லாமல் தோராயமாக மின்பயன்பாட்டைக் கணக்கிடுவது போன்ற செயல்களில் கணக்கெடுக்கும் ஊழியர்கள் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
அந்த உத்தரவில், ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் மாதம்தோறும் 2,500 மின்இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். நிதிப் பிரிவு அலுவலர்கள் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.