தொழில் நிறுவனங்களுக்கு தமிழில் பயிற்சி வழங்க இந்தியன் வங்கியின் ‘பிரேரணா’ திட்டம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்

தொழில் நிறுவனங்களுக்கு தமிழில் பயிற்சி வழங்க இந்தியன் வங்கியின் ‘பிரேரணா’ திட்டம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்
Updated on
1 min read

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி, மேலாண்மை குறித்த பயிற்சியை தமிழில் வழங்குவதற்காக, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ள ‘எம்எஸ்எம்இ பிரேரணா’ என்ற திட்டத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு நிதி, மேலாண்மை குறித்த பயிற்சியை உள்ளூர் மொழியில் வழங்கும் விதமாக, ‘எம்எஸ்எம்இ பிரேரணா’என்ற திட்டத்தை இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், தங்கள் தொழிலில் ஏற்படும் சிக்கல்களுக்கு அவர்கள் எளிதில் தீர்வு காண முடியும்.

பயிற்சி முடிவில் சான்றிதழ்

‘பூர்ணதா’ என்ற நிறுவனத்துடன்இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பயிற்சியை பெறும் நிறுவனங்களுக்கு பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

இத்திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், இந்த மகத்தான திட்டத்தை இந்தியன் வங்கி தொடங்கி உள்ளது. இதன்மூலம், அந்நிறுவனங்களுடன் கைகோத்து செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பார்த்து, மற்றவங்கிகளும் இதுபோன்ற திட்டங்களை தொடங்கும்’’ என்றார்.

மொழி பிரச்சினைக்கு தீர்வு

இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பத்மஜா சுந்துரு பேசும்போது, ‘‘சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் பெறுவதற்காக பட்டயக் கணக்காளர்கள், முகவர்களை சார்ந்துள்ளனர். அவர்களுக்கு மொழிப் பிரச்சினை முக்கிய தடையாக உள்ளது. ‘பிரேரணா’ திட்டம் இதற்கு நல்ல தீர்வாக அமையும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் இயக்குநர்கள், செயல் இயக்குநர்கள் பட்டாச்சார்யா, ஷெனாய், ராமச்சந்திரன், தொழில் கூட்டமைப்பினர், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியன் வங்கி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in