

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலா கலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையின் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்க ளும், இந்து அமைப்பினரும் வழிபாடு நடத்தினர்.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா, ஆர்எஸ்எஸ் உட்பட 14-க்கும் அதிகமான இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கேட்டனர். விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உள்ளிட்ட வேதி பொருட்களால் செய்திருக்கக் கூடாது, சிலையின் உயரம் 5 முதல் 20 அடி வரை மட்டுமே இருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை முன் வைத்து சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி அளித்தது.
இந்து அமைப்புகள் சார்பில் சென்னையில் 2 ஆயிரத்து 93 இடங்களில் சிலைகள் அமைக்கப் பட்டன. இது தவிர தனியார் அமைப்புகள், நலச்சங்கங்கள், ஓட்டுநர் சங்கத்தினர் போன்றவை சார்பிலும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலை மற்றும் சர்ச்சைக்குரியவையாக கண்டறியப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24 நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க 3 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் திருவான்மியூர், பட்டினப்பாக்கம், காசிமேடு, எண் ணூர் ஆகிய இடங்களில் சிலைகள் கரைக்கப்படவுள்ளன. இதற்காக 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயில், கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோயில், ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் நேற்று நடந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.