Published : 08 Oct 2020 06:56 AM
Last Updated : 08 Oct 2020 06:56 AM

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் சொத்துகள் முடக்கம்

சென்னை

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடிமதிப்புள்ள கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் நிலம் ஆகிய சொத்துகளை பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கம் செய்து வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கருப்பு பணம், கள்ள நோட்டுகள் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு 2016-ம் ஆண்டுநவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய்நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, சசிகலா தன்னிடமிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் சுமார் ரூ.1,500 கோடி சொத்துகளை பினாமி பெயர்களில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல்களை வருமானவரித் துறை அதிகாரிகள் ரகசியமாக சேகரித்தனர். அதைத் தொடர்ந்து போலி நிறுவனங்களை நடத்தியது, அந்த நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில், வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்கள் நீடித்த இந்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்மற்றும் விசாரணையில் கிடைத்ததகவல்களின்படி, போலி நிறுவனங்கள், சொத்துகள் விவரங்களை, வருமான வரித் துறை அதிகாரிகள் முழுமையாக கண்டுபிடித்தனர். தொடர்ந்து, ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துகளை, 2019 நவம்பரில், வருமானவரித் துறை முடக்கியது. இதே போல செப்டம்பர் 1-ம்தேதி 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 65 சொத்துகள் முடக்கப்பட்டன. தற்போது, சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானவரித் துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

இதுகுறித்து, வருமானவரி துறை அதிகாரிகள் கூறியதாவது:

சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில்,2017-ல் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது, ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களின் பேரில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரில் சென்னைக்கு அருகே உள்ள சிறுதாவூர் நிலம் மற்றும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் நிலம் என மொத்தம் சுமார் 1,100 ஏக்கர் நிலங்கள், பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், கோடநாடு எஸ்டேட்டின்மதிப்பு, 1,500 கோடி மற்றும் சிறுதாவூர் நிலத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனால், இந்த சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கானநோட்டீஸ், அந்த சொத்துகளின்வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன. சொத்துகளை கையகப்படுத்தியது தொடர்பாக சிறையில் உள்ளமூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x