Last Updated : 07 Oct, 2020 08:25 PM

 

Published : 07 Oct 2020 08:25 PM
Last Updated : 07 Oct 2020 08:25 PM

ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது: பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேச்சு

‘‘மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது,’’ என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சிவகங்கை அருகே காளையார்கோவிலில் திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் மேப்பல் சக்தி தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

வருகிற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக பிரதிநிதிகள் தமிழக சட்டப்பேரவைக்கு செல்வர். பாஜகவால் கைகாட்டபடுபவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். கரோனா காலத்தில் உலகத்திற்கே இந்தியா தான் வழிகாட்டியாக உள்ளது.

கரோனாவால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க ஏழைகளுக்கு பாஜக சார்பில் உணவு கொடுத்து வருகிறோம். மத்திய அரசு திட்டம் மூலம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த பலர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். எம்எல்ஏக்கள் சிலரும் சேர தயாராக உள்ளனர். மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது.

விவசாயிகள் மசோதாவை எதிர்த்து அரசியல் கட்சிகள் தான் போராடுகின்றன. உண்மையான விவசாயிகள் எதிர்க்கவில்லை. இந்த மசோதாவிற்கு விவசாயப் பிரதிநிதிகள் ஆதரவு தான் தெரிவித்துள்ளனர்.

திமுகவினர் நடத்துகிற பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தை தவிர்த்து மற்ற மொழிகளை நடத்த மாட்டோம் என சொல்ல தயாரா?

அரசு பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் தான் மற்ற மொழிகளை படிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது ஒரு நவீன தீண்டாமை. திமுக ஏற்படுத்தி இருந்த மாயையை உடைத்து தேசியம், தெய்வீகம் பக்கத்திற்கு மக்கள் அணி திரண்டு வருகின்றனர். விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

பாஜக ஆட்சி தமிழகத்திலும் அமையும். பல ஆண்டுகள் கனவான ராமர் கோயில் கட்டுவதை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். காஷ்மீர் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஏராளமான மாற்றங்களை பாஜக செய்துள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா காலத்தில் தமிழகத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்தது மக்களுக்கு தெரியும். எதுவும் தமிழகத்திற்கு கொடுக்கவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு.

அதிமுக கூட்டணியுடன் தான் உள்ளோம். தமிழகத்தில் எதிர்கட்சிகளின் கூடாரம் காலியாக கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். விவசாயிகள் மசோதாவை எதிர்க்கட்சித் தலைவர் ஏன் எதிர்க்கிறார் என்று தெரியவில்லை.

இந்த மசோதாக்கள் மூலம் விவசாயப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியும். விவசாயிகளே விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியும். அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வது அவர்களது உரிமை. அதில் கருத்து தெரிவிக்க தேவையில்லை, என்று கூறினார்.

மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x