Published : 07 Oct 2020 08:01 PM
Last Updated : 07 Oct 2020 08:01 PM

கரோனா உருவாக்கிய தொழில்முனைவோர்: மண் குவளை டீ விற்பனையால் மனம் கவரும் மதுரை பட்டதாரி இளைஞர்

மதுரை

மதுரையில் டீ கடை நடத்தும் பிஇ பட்டதாரி இளைஞர் ஒருவர், புதிய முயற்சியாக உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான முறையில் மண் குவளையில் டீ வழங்குவது பொதுமக்களை ஈர்த்துள்ளது.

சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக பேப்பர், மண் போன்வற்றால் உருவாக்கப்பட்ட எளிதில் அழியக்கூடியப் பொருட்களைப் பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் விழிப்புணர்வு மற்றும் அபராத நடவடிக்கைகளால் ஒரளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.

அதனால், ஹோட்டல்கள், டீ கடைகளில் முற்றிலும் பிளாஸ்டிக் கப் டீ முறை ஒழிக்கப்பட்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பேப்பர் கப்புகள் மற்றும் கழுவி மீண்டும் பயன்படுத்தப்படும் கண்ணாடி டம்ளர்களில் டீ வழங்கப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே டீ கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர் அ.ஷேக் தாவூத் என்பவர், புதிய முயற்சியாக உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான மண் குவளையில் டீ வழங்குகிறார். தந்தூரி அடுப்பில்

மண் சட்டியில் டீ ஊற்றி டீ பொங்கி வரும்போது அதை மண் குவளையில் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார். இதுவரை பிளாஸ்டிக், பேப்பர் கப்பில் டீ குடித்து பழகிப்போன மதுரை நகரவாசிகளுக்கு மண் குவளையில் டீ குடிப்பது புது அனுபவமாக இருக்கிறது.

சூடான டீயை, பிளாஸ்டிக் கப், பேப்பர் கப்புகளில் ஊற்றிக் குடிப்பதால் அதை தயாரிக்கப்பயன்படுத்திய மூலப்பொருட்கள் டீயுடன் சேர்ந்து வயிற்றுக்குள் சென்று உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம். மண் குவளையில் டீ குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்பதோடு மண் வாசனை நறுமணம் மண் குவளையில் டீ குடிப்போரை கிராமப்புறத்திற்கே அழைத்து சென்றுவிடுகிறது.

மண் குவளை டீ உடலுக்கு குளிர்ச்சியையும் தருவதால் ஷேக் தாவூத் கடையில் தற்போது மண் பானை டீ குடிக்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர்.

ஷேக் தாவூத், 2018-ம் ஆண்டில் பொறியியல் படித்து முடித்தார். சிவில் இன்ஜினிரிங் படித்ததால் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

கரோனா, அனைவர் வாழ்வாதாரத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டதால் ஷேக் தாவூத்தை, இந்த ஊரடங்கு சுயதொழில் தொடங்க வைத்தது. ஏதோ தன்னோட வாழ்வாதாரத்திற்காக மட்டும் கடை நடத்தாமல், சமூகப்பொறுப்புடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை விழிப்புணர்வு செய்யும் வகையில் மண் குவளையில் டீ வழங்குவது பொதுமக்களை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து ஷேக் தாவூத் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் பிளாஸ்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டு ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மால்கள், பேருந்து நிலையங்களில் உள்ளிட்ட பொதுஇடங்களில், தேநீர் அருந்தும் டம்ளர்களுக்கு பதில், மண்பாண்டத்தில் செய்யப்பட்ட குவளைகளை உபயோகப்படுத்தலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

அதன் அடிப்படையிலேயே மண் பானையில் டீ தயாரித்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் மண் குவளையில் டீ வழங்குகிறேன். டீ குடித்துவிட்டு, கடை முன் உள்ள குப்பை தொட்டியில் மண் குவளையைப்போட்டுவிடலாம். வீட்டிற்கும் எடுத்துச் சென்றுவிடலாம்.

கரோனா பரவும் இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஆரோக்கியத்திற்காகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், டீயில் பட்டை, புதினா போன்ற மருத்துவகுணம் வாய்ந்த பொருட்களும் கலந்து கொடுக்கிறோம்.

என்னைப்போல் மற்ற டீக்கடைக்காரர்களும் மண் குவளையில் டீ விற்கத் தொடங்கினால் கிராமப் பகுதிகளில் உள்ள மண்பானை தயாரிக்கும் தொழில் முனைவோர் பெரிதும் பயன்பெறுவார்கள்.

அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது. டீ குடித்துவிட்டு மண் குவளைகளை தூக்கி வீசிவிட்டால், அது மிகக்குறுகிய காலத்தில் மண்ணுடன் கலந்து விடும்.

புதிதாக டீ கடை தொடங்கினாலும் வித்தியாசமான முயற்சியாக மண் குவளையில் டீ வழங்குவதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வந்து டீ குடித்து செல்கின்றனர். என்னோட இந்த முயற்சி வெற்றிப்பெற்றால் தமிழகம் முழுவதுமே இந்த முயற்சியை கொண்டு செல்வேன், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x