

திருநெல்வேலியில் சரியான உணவை உண்போம் திட்ட சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைவனம், சரியான உணவை உண்போம் என்னும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு நாடு முழுவதும் 150 மாவட்டங்களை தேர்ந்தெடுத்துள்ளது.
அதில் திருநெல்வேலி மாவட்டமும் ஒன்று.
இந்த திட்ட முகாம் தொடக்க விழா திருநெல்வேலி மருத்துவ கல்லூரி வளாகத்திலுள்ள மருந்தியல்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் வரவேற்றார். பரிக்ஷன் நிறுவன இயக்குநர் பிரவீன் ஆண்ட்ரூஸ் திட்டம் குறித்து விளக்கினார்.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
திட்டத்தை தொடங்கி வைத்து, விளம்பர பதாகையை திறந்து வைத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசியதாவது:
நாம் உண்ணும் உணவு சத்தாகவும், சரிவிகிதமாகவும், செறிவூட்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
ஆரோக்கியத்துக்கு உணவுதான் அடிப்படை. உணவு வணிகர்கள் கடைகளில் உணவு தயாரிக்க பயன்படுத்தும் சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதால் பல நோய்கள் உருவாகிறது. பிறரது ஆரோக்கியத்தை பாழ்படுத்தி சம்பாதிப்பது தவறு என்ற எண்ணம் உணவு வணிகர்கள் மத்தியில் இருக்க வேண்டும்.
உணவகங்களை நம்பிவரும் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இதையொட்டி சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாமையும் ஆட்சியர் தொடங்கி வைத்து, இலவச சீருடைகளை சாலையோர வியாபாரிகள் சிலருக்கு வழங்கினார். அத்துடன் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவுச் சான்று உடனடியாக வழங்கும் முகாமும் நடத்தப்பட்டது.
2 சிறு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சாந்தாராமன், பிரிக்ஷன் நிறுவன மேலாண் இயக்குநர் சரண்யா காயத்ரி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் டைட்டஸ் பர்னாண்டோ, கிருஷ்ணன், சங்கரலிங்கம், செல்லப்பாண்டி, சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா. சங்கரலிங்கம் நன்றி கூறினார்.