Last Updated : 07 Oct, 2020 06:36 PM

 

Published : 07 Oct 2020 06:36 PM
Last Updated : 07 Oct 2020 06:36 PM

திமுகதான் ஜெயிக்கும் எனத் தெரிந்தே முதல்வர் வேட்பாளர் பதவியை ஓபிஎஸ் விட்டுக் கொடுத்திருக்கிறார்: தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி 

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஆண்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ, தங்க தமிழ்ச்செல்வன் இப்போது தேனி வடக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளர். அதிமுக, அமமுகவில் இருந்தபோது ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அரசியல் செய்து புகழ்பெற்ற அவர், இன்றைய அரசியல் சூழல் குறித்து என்ன நினைக்கிறார்?

'இந்து தமிழ்' இணையதளத்துக்காக அவருடன் பேசினோம்.

உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ், முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டாரே?

கொஞ்சம் நில்லுங்க. அவர் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கல. முதல்வர் வேட்பாளர் பதவியைத்தான் விட்டுக்கொடுத்திருக்காரு. அவர் பயங்கரமான புத்திசாலி. எப்பவுமே பின்னாடி நடக்கப் போறத முன்னாடியே அவர் கண்டுபிடிச்சிடுவாரு. எப்படியும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும், முதல்வர் நாற்காலியில மு.க.ஸ்டாலின்தான் உட்காரப் போறாரு என்பதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான், முதல்வர் வேட்பாளர் நானில்ல... எடப்பாடி பழனிசாமிதான்னு கையைக் காட்டியிருக்காரு.

இப்ப விட்டுக்கொடுத்திருக்கலாம். ஆனாலும், ஒருத்தரை ஒருத்தர் காலை வாரணுங்கிறதுல ரெண்டு பேரும் தெளிவா இருக்காங்க. வேணுமின்னாப் பாருங்க, தேர்தல் நேரத்துல இந்த ரெண்டு கோஷ்டிக்கும் நடுவுல மிகப்பெரிய மோதல் வரும். அத்தனை இடங்கள்லயும் திமுக கூட்டணி ஜெயிக்கும்.

சரியாக, ஓபிஎஸ்ஸின் போடி, பெரியகுளம் தொகுதிகளுக்குப் பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே அந்தப் பதவியைக் கேட்டு வாங்கினீர்களா?

அப்படியெல்லாம் இல்லை. திமுகவில் எல்லா மாவட்டங்களையும் பிரிச்சுக்கிட்டு வர்றாங்க. அந்த அடிப்படையில தேனி மாவட்டத்தையும் தெற்கு, வடக்குன்னு ரெண்டாப் பிரிச்சு கம்பம் ராமகிருஷ்ணனுக்கும், எனக்கும் பொறுப்பு கொடுத்திருக்காங்க. ரெண்டு பேருக்கும் தலா ரெண்டு தொகுதி வருது. வர்ற தேர்தல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகள்ல சிறப்பா வேலை செஞ்சு வெற்றி பெறுவதுதான் மாவட்டச் செயலாளர்களின் கடமை.

அந்த வேலையை முன்கூட்டியே செஞ்சால், வெற்றி பெறலாம் என்ற அடிப்படையில்தான் ஸ்டாலின் இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். இதுல வேறொன்னும் இல்லை. தேனி மாவட்டத்துல உள்ள 4 தொகுதிகளிலும் திமுக ஜெயிக்கணும்னு வேலை பார்க்கச் சொல்லியிருக்காங்க. நாங்க ஜெயிச்சுக் காட்டுவோம்.

நீங்க ஜெயிப்போம் என்று சொல்வதிலேயே, ஓபிஎஸ்-ஐ அவருடைய சொந்தத் தொகுதியிலேயே தோற்கடிப்போம் என்கிற அர்த்தமும் வருகிறதே?

அதுல என்ன சந்தேகம்? நான் தினமும் போடி தொகுதிக்குப் போறேன். மக்கள்கிட்ட பேசுறேன். அவ்வளவு பேரும் திமுகதான் ஜெயிக்கும்னு அடிச்சிச் சொல்றாங்க. ஓபிஎஸ் மேலயும், அவரோட மகன் மேலயும் கடுமையான அதிருப்தி இருக்குது. இந்தவாட்டி எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவங்களால ஜெயிக்க முடியாது.

உங்களை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி.யின் செயல்பாடு எப்படியிருக்கிறது?

இந்த ஒரு வருஷத்துல தொகுதிக்குள்ள ஆளப் பாக்கவே முடியல. தினமும் 6 பேப்பர் படிக்கிறேன். செய்தியிலேயும் அவரோட பேரைப் பார்க்க முடியல. நியுமராலஜி பிரகாரம் அவரோட பேரை மாத்திக்கிட்டாரு என்கிற செய்தியைத்தான் பேப்பர்ல பார்த்தேன். அவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஜெயிச்சதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு, வர்ற 16-ம் தேதி விசாரணைக்கு வருது. அதுல அவரோட பதவியே காலியானாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல. ஏன்னா, ஒரே நாடாளுமன்றத் தொகுதிக்கு 850 கோடி ரூபாய் செலவு பண்ணியிருக்காங்க. இவ்வளவு பெரிய செலவை எல்லாம் மறைக்கவே முடியாது. கண்டிப்பா மாட்டுவாரு.

சசிகலாவைப் பற்றியும், ஓபிஎஸ், இபிஎஸ் பற்றியும் அறிந்தவர் நீங்கள். சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்று கருதுகிறீர்கள்?

எனக்குத் தெரிஞ்சு ஒண்ணும் பெரிசா நடக்காது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவை ஏத்துக்கிடுவாங்களா, சசிகலா இவங்களை ஏத்துக்கிடுவாங்களா என்பதே சந்தேகம்தான். ஏன்னா, அம்மா இறக்கக் காரணமே சசிகலாதான்னு மேடைக்கு மேடை பிரச்சாரம் செஞ்சதோடு, தனி ஆணையம் அமைத்து விசாரிச்சவங்க இவங்க. இருந்தாலும் சசிகலாவின் விடுதலைக்குப் பிறகுதான் என்ன நடக்கும்னு தெரியும்.

டிடிவி தினகரனின் அரசியல் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்தான் ஜீரோ ஆயிட்டாரே? அழகா 18 எம்எல்ஏக்களை வெச்சுக்கிட்டு சட்டப்பேரவையையே கலக்கியிருக்கலாம். எடப்பாடி அரசோட ஊழலை அங்கயே புட்டுப்புட்டு வெச்சிருக்கலாம். எல்லாத்தையும் கெடுத்துட்டாரு. 18 எம்எல்ஏக்கள் பதவியையும் காலி பண்ண வெச்சி, நடுரோட்டுல நிப்பாட்டிட்டாரு. அவர் மட்டும் எம்எல்ஏவாக பதவி சுகம் பார்க்கறாரு.

இது நல்ல அரசியல் தலைவருக்கு அழகா? இவரை நம்பி எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவங்க யாருமே நல்லாயில்லை அப்படிங்கறபோது, இனிமேல் இவரை நம்பி யார் ஓட்டுப் போடுவாங்க?

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x