Last Updated : 07 Oct, 2020 05:13 PM

 

Published : 07 Oct 2020 05:13 PM
Last Updated : 07 Oct 2020 05:13 PM

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்குவது எப்போது?- மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 பிப்ரவரியில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மதுரை தோப்பூரில் 2018-ல் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இருப்பினும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தேன்.

அந்த மனு 2018-ல் விசாரணைக்கு வந்த போது, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதிலிருந்து 45 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது.

இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. ஆனால் இப்போது வரை தோப்பூரில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. வேறு எந்த கட்டுமானப் பணியும் தொடங்கப்படவில்லை.

தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தாமதம் செய்யப்படுகிறது. தற்போது கரோனா பரவி வரும் சூழலில் உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழந்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

இந்த நேரத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் கரோனா தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பர்.

மத்திய அரசின் தாமதத்தால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர். இதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை விரைவில் தொடங்கவும். முடிக்கவும், அதற்கு போதுமான நிதி ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி வாதிடுகையில், மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

இதையடுத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான தற்போதைய நிலை அறிக்கை மற்றும் தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட பிற மாநில எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவ.5-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x