பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதில் நீடிக்கும் சிக்கல்: ரேஷன் ஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரிக்கை

பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதில் நீடிக்கும் சிக்கல்: ரேஷன் ஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரிக்கை
Updated on
2 min read

தமிழக அரசு கடந்த 1-ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தியுள்ளது. அந்தப் பணியில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், அதற்குத் தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் எனவும் ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்துக் கன்னியாகுமரி மாவட்டக் கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் டி.சௌந்தர்ராஜ் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''நியாயவிலைக் கடைகளுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இதைச் செயல்படுத்துவதில் பல பகுதிகளில் இணையப் பிரச்சினை உள்ளது. எந்தெந்தப் பகுதியில் எந்த சிம்முக்கு நன்றாக டவர் இருக்கிறதோ அந்தப் பகுதிகளில் அந்தந்த சிம் வழங்கப்பட வேண்டும்.

மலைப்பகுதி மற்றும் குக்கிராமங்களில் எந்த சிம்மும் செயல்படவில்லை. இணைய சர்வர் பிரச்சினைகளைப் போக்க RAM அளவு கூட்டப்படவேண்டும். இதையெல்லாம் செய்யாததால் ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்களுக்குப் பலமணி நேரம் பொருட்கள் வழங்க முடியவில்லை. இதேபோல் வயதானவர்களுக்குக் கைரேகை பதிவதில்லை. இதனால் பொருட்களை வழங்கப் பெரும் சிரமம் உள்ளது.

ஸ்மார்ட் அட்டையில் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை மாற்றியவர்களுக்குப் புதிய எண்ணை இணைக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். எந்த ரேஷன் கடையிலும் எந்தப் பொருளையும் வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், ரேஷன் கடைகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை. இது பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கிட்டங்கியிலிருந்து வரும் பொருட்கள் மிகக் குறைவாக உள்ளன. குறிப்பாகச் சர்க்கரை மிகவும் குறைவாக உள்ளது. இப்பிரச்சினைகளைப் போக்க எங்களுடைய நெடுநாள் கோரிக்கையான பொட்டலம் மூலம் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலிசாக்கு டெண்டர் முடிந்து 1 மாதத்திற்கு மேல் ஆன பிறகும் இன்னும் பல பகுதிகளில் காலிசாக்கு எடுக்கப்படவில்லை. எனவே போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் பொருட்களை ஒன்று அல்லது இரண்டு தவணைகளாகக் கூடக் கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு 2 அல்லது 3 தடவையாகப் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது மேலும் அதிக வேலைப் பளுவை உருவாக்குகிறது.

நடமாடும் நியாயவிலைக் கடைகளுக்குத் தேவையான பணியாளர்களை நியமிப்பதோடு அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளரை நியமிக்க வேண்டும். அதிக வேலைப் பளுவால் நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. கழிப்பறை வசதி இல்லாத நியாயவிலைக் கடைகளுக்குக் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். ஊரடங்கு காலத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த நடைமுறை செலவினங்கள், பல பகுதிகளில் இன்னும் வழங்கப்படவில்லை. குறிப்பாக மீனவர் கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைகளுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டதில் உள்ள நோக்கத்தை மறைத்து ரேஷன் கடையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்குதான் இம்முறை அமல்படுத்தப்பட்டது என விளம்பரப்படுத்துவதால் ரேஷன் கடை பணியாளர்கள் மேல் பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

அரசு அறிவிக்கும் புதிய திட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை ரேஷன் கடை பணியாளர்கள் மேல் திணிக்காமல் இந்தப் பிரச்சினைகள் மீது தீர்வு காண வேண்டும். நியாய விலைக்கடை ஊழியர்களின் சம்பளம், பணிவரன்முறை உள்ளிட்ட பிரச்சினைகள் மீது உரிய தீர்வு காணவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in