

அரசு இடங்களை ஆக்கிரமிப்போர், அதற்குத் துணை போகும் அதிகாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கொடைக்கானலில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நீர் நிலைகள், சாலை மற்றும் பொதுப்பாதை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது.
எனவே, அரசு நிலங்களை ஆக்கிரமிப்போர் மற்றும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்பு, சாலை மற்றும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடங்கள் ஆக்கிரமிப்பு வழக்குகளை தனித்தனியாக பிரித்து பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் ஆக்கிரமிப்புக்கு உதவி செய்யும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்புள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு வழக்குகளில் வழக்கறிஞர் முகமது ஆதீப் அமிகஸ் கியூரியாக (நீதிமன்றத்துக்கு உதவுபவராக) நியமிக்கப்படுகிறார் என உத்தரவிட்டனர்.
பின்னர், விசாரணை அக். 13-க்கு ஒத்திவைக்கப்பட்டது.