Published : 07 Oct 2020 11:46 AM
Last Updated : 07 Oct 2020 11:46 AM

எதிரிகளின் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

பிரச்சினை வராதா, அதில் குளிர்காயலாம் என எதிர்பார்த்தவர்களின் எண்ணங்களில் மண் விழுந்துவிட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் மாறி மாறிக் கருத்து தெரிவித்தது, முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழு போன்ற சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.

கடந்த செப். 28-ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பெரும் விவாதமாகவே வெடித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் நேரடியாகவே காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட, முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு அக்.7-ம் தேதி (இன்று) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன. நேற்று (அக். 6) இரவு வரை இந்த பேச்சுவார்த்தைகள் நீடித்தன.

இதையடுத்து, இன்று (அக். 7) ஏற்கெனவே அறிவித்ததன்படி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.

அதன்படி வழிகாட்டுதல் குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், மோகன், கோபால கிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்.

இதன்பின்னர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர்-ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இன்று பொன்னான நாள். அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் எதிர்பார்த்த அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மகிழ்ச்சியான ஒருமித்த கருத்து எட்டப்பட்டு நல்ல முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். பிரச்சினைகள் வராதா அதில் குளிர்காயலாம் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போடுகின்ற வகையில் ஏகோபித்த உணர்வுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். எதிரிகள், துரோகிகள் புறமுதுகை காட்டி ஓடும் வகையில் புதிய புறநானூற்றை அதிமுக படைக்கும். 2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம்" என்றார்.

அப்போது, வழிகாட்டுதல் குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குறைவாக உள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நீங்கள்தான் இதனை சொல்கிறீர்கள். ஒருமித்த கருத்துடன் தான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகுபாடு, வேறுபாடு இல்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x