

அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கடந்த செப். 28-ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பெரும் விவாதமாகவே வெடித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் நேரடியாகவே காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட, முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு அக்.7-ம் தேதி (இன்று) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன.
அதேநேரம், எடப்பாடி பழனிசாமி உடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர், காலை 11.30 மணிக்கு, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சண்முகம், உதயகுமார் ஆகியோர் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்து இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். .
இதன்பின்னர், அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் நேற்று மாலை பழனிசாமி உடன் மீண்டும் ஆலோசனை நடத்தினர். அதேநேரம், ஓபிஎஸ்ஸும் தனது ஆதரவாளர்களுடனும் அடுத்தகட்ட ஆலோசனையில் இறங்கினார்.
மாலை 6.30 மணி அளவில் ஓபிஎஸ் இல்லத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வந்து ஆலோசனையில் பங்கேற்றார். பிறகு, ஓபிஎஸ் வீட்டில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர் சி.வி.சண்முகம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் இரவு 7.40 மணிக்கு முதல்வர் பழனிசாமியைச் சந்தித்தனர். இந்த ஆலோசனைகள் இரவு வரை நீடித்தன.
இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரின் கருத்துகளும் இறுதி செய்யப்பட்டு, அவர்களது நிபந்தனைகளும் ஏற்கப்படும் நிலையை எட்டியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று (அக். 7) ஏற்கெனவே அறிவித்தபடி, முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்காக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கு குவியத்தொடங்கினர். இருவருக்கும் ஆதரவான முழக்கங்களை அவரது ஆதரவாளர்கள் எழுப்பினர்.
இந்நிலையில், காலை 9.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தன் வீட்டிலிருந்து புறப்பட்டு தலைமை அலுவலகத்தை அடைந்தார். அப்போது அவரது கார் முன்பு மலர்களைத் தூவி அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின்னர், ஜெயலலிதா-எம்ஜிஆர் சிலைகளுக்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.
இதன்பின் சற்று நேரத்தில் முதல்வர் பழனிசாமி தலைமை அலுவலகத்தை அடைந்தார்.
இதையடுத்து, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.
மேலும், அவைத்தலைவர் மதுசூதனனுக்கு உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை எனவும், அவர் சம்மதத்துடனேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.
அப்போது, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றோர்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் தங்கமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் சி.வி.சண்முகம்
அமைச்சர் ஆர்.காமராஜ்
ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்எல்ஏ
பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி.
மோகன்
கோபால கிருஷ்ணன்
மாணிக்கம்
ஆகியோர் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.