

கொங்கு மண்டல மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிமிக்க மாவட்டமாக, பின்னலாடை உற்பத்தி நகரமான திருப்பூர் விளங்குகிறது.இங்கு வெளி மாவட்டங்கள் மற்றும்மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர்.
திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில் புதிதாக குடியேறும்மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், கட்டுமானத் துறையும்வளர்ச்சி பாதையை நோக்கியேஉள்ளது.
கட்டுமானத் துறையை பொறுத்தவரை, உள்ளூர் தொழிலாளர்களுக்கு நிகராக வெளியூர்,வடமாநில தொழிலாளர்களும், உதவியாளர்கள் தொடங்கி அனைத்து வகை பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில், கரோனா வைரஸ் பரவல் தாக்கத்தால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால், திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானத் துறைபணிகளில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில், தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் கணிசமான அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். வடமாநிலதொழிலாளர்கள் இன்னும்வராத நிலையில், ஆள் பற்றாக்குறையால் கட்டுமானத் துறை சிக்கலை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து அவிநாசியை சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் பெருஞ்சித்ரனார், ‘இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "வட மாநில தொழிலாளர்கள் பலர் நிரந்தரமாக தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், ஊருக்கு சென்ற அவர்கள் இன்னும் திரும்பவில்லை. இதனால் கட்டிடங்களில் உரிய நேரத்தில் வேலையை முடிக்கமுடியவில்லை. 10 பேர் வேலை செய்த கட்டிடங்களில், தற்போது 2பேர் மட்டுமே உள்ளனர். உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை. வெளியூர்களில் தேடிப்பிடிக்க வேண்டியநிலை உள்ளது. கரோனா பிரச்சினைக்கு மத்தியில் ஒருசில இடங்களில் புதிய வேலை வந்தாலும், தொழிலாளர்கள் இல்லாமல் வேலையை தொடங்க முடியவில்லை. திருப்பூர் தவிர கோவை, ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் இதே நிலைதான் உள்ளது" என்றார்.
ரயில்கள் இயக்கப்பட வேண்டும்
திருப்பூர் கட்டிட பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர்டி.கே.பெரியசாமி கூறும்போது,"தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ரயில்கள் இயக்கப்பட்டால் மட்டுமே வடமாநில தொழிலாளர்கள் வர வாய்ப்புள்ளது. ரயில்கள் ஓட வேண்டும். அதற்கு ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்ட வேலைகள் தவிர, சில நாட்களாக புதிதாககட்டுமானப் பணிகளை தொடங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. ஒட்டுமொத்தமாக கட்டுமானத் துறையிலும் தேக்க நிலை நிலவுகிறது. நிலைமை விரைவில் சீராகும் எனநம்புகிறோம்,'என்றார்.