

உத்தரபிரதேசம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு இரண்டு லாரிகளில் கொண்டு செல்லபட்ட 67 எருமைகளை, காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வரைமுறைகளை மீறி இறைச்சிக்காக அதிகளவில்மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஓடக்காடு அருகே சேலம் - கோவை தேசியநெடுஞ்சாலையில் இரண்டு லாரிகளை மறித்து இந்து அமைப்பினர் சிலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு பெருமாநல்லூர் காவல்துறையினர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வரைமுறைகளை மீறி ஆந்திராவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயம் நோக்கி சென்ற லாரியில் 29 எருமைகளும், உத்தரப்பிரதேசத்திலிருந்து கொச்சின் நோக்கி சென்ற லாரியில் 38 எருமை மாடுகளும் இருந்தன.
எருமைகளுடன் லாரிகளைபறிமுதல் செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநர்களான ஆந்திரா மாநிலம் சூரியஹட்டா பகுதியைச் சேர்ந்த வி.மலையா(29), அரியானா மாநிலம் மெவாத் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.முகமது ஹசன் (42) ஆகிய இருவரை, மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘பறிமுதல் செய்யப்பட்ட எருமைகள் கோசாலைக்கு கொண்டு செல்லப்படும். நீதிமன்றம் மூலமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.