Published : 07 Oct 2020 10:05 AM
Last Updated : 07 Oct 2020 10:05 AM

பெற்றோர்கள் வேண்டுகோளை ஏற்று புதூர் அருகே மரத்தடியில் அமர்ந்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள்: சமூக இடைவெளியுடன் கற்கும் மாணவர்கள்

புதூர் அருகே மணியக்காரன்பட்டி ஊராட்சியில் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று மரத்தடியில் அமர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே மணியக்காரன்பட்டி ஊராட்சியில் மணியக்காரன்பட்டி, தவசிலிங்கபுரம், மேலகுமாரசக்கனாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6 ஆசிரியர்கள் வேலை பார்க்கின்றனர். சுமார் 50 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தொலைக்காட்சிகளில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் பார்த்து படித்து வருகின்றனர்.

ஆனால், பாடங்களில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, விளக்கமளிக்க முடியாத நிலையில் பெற்றோர் உள்ளனர். இதையடுத்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு மாணவர்களின் சிரமம் குறித்து தெரிவித்துள்ளனர்.

தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களிடம் இதுபற்றி அவர் கலந்தாலோசித்தார். மாணவர்களின் சிரமத்தை போக்க அவர்களும் முழுமனதுடன் சம்மதித்தனர்.

இதன் பின்னர் மணியக்காரன்பட்டி, தவசிலிங்கபுரம், மேல குமாரசக்கனாபுரம் ஆகிய கிராமங்களில் வாரத்துக்கு 2 நாட்கள் ஆசிரியர்கள் நேரில் சென்று அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து பாடம் நடத்துகின்றனர். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பாடம் கற்கின்றனர்.

இதுகுறித்து ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘மாணவர்களின் சந்தேகத்தை போக்க உதவுமாறு பெற்றோர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்ததால், அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாடம் நடத்த முடிவெடுத்தோம். நான் உட்பட எங்கள் பள்ளி ஆசிரியர்கள் சுமதி, ரமேஷ், வெங்கடேஷ், பாக்கியலட்சுமி, உமாவதி ஆகியோர் வாரம் 2 நாட்கள் முறைவைத்து, ஒவ்வொரு ஊருக்கும்சென்று பாடம் கற்றுக்கொடுக் கிறோம். வீட்டுப் பாடங்கள் வழங்குகிறோம். அதனை முறையாக செய்யாத மாணவரின் பெற்றோருக்கு தகவல் கூறுகிறோம். மாணவர்களின் வாசிப்புத் திறனும், எழுத்தறிவுத் திறனும் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள்நோக்கம். மாணவர்கள், பெற்றோர்மத்தியில் எங்களது முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது’’ என்றார்.

இதுகுறித்து அயன்வடமலாபுரம் கிராமத்தை சேர்ந்த அ.வரதராஜன் கூறும்போது, ‘‘ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டாலும், ஆசிரியர்கள் நேரில் கற்றுக் கொடுக்கும் போது தான் மாணவர்களின் மனதில் பதியும். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க சரியான ஆட்கள் இல்லை.

எனவே, மாணவர்களின் சந்தேகங்களை போக்கவும், ஆசிரியர் நேரில் நடத்தும் பாடங்களை உட்கிரகிக்கவும் வேண்டும் என்பதால் பெற்றோர் அனைவரும் ஒருமனதாக ஆசிரியர்களை வரவழைத்து, தங்களது குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வைக்கின்றனர். இது ஒரு நல்ல முன்னெடுப்பு’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x