மழைக்காலம் முடியும் வரை மதுரையில் பள்ளம் தோண்ட தடை: கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழையால் வெள்ளம் ஏற்பட்டால் மதுரை மாவட்டத்தில் 27 இடங்கள் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. இதனால், அப்பகுதிகளில் மழைநீர்க் கால் வாய்களைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இம்மாதம் தொடங்க வேண்டிய வடகிழக்குப் பருவமழை, குறைந்த காற்றழுத்தம் காரணமாகத் தள்ளிப்போகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பருவமழையைச் சமாளிக்க முன்னேற்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் பி.சந்திரமோகன், மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் நகரில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்பின் கண்காணிப்பு அலுவலர் பி.சந்திரமோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கக்கூடிய 27 இடங்கள் கண்டறியப்பட்டு அதில் ஒவ்வொரு பகுதிக்கும் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள். இந்த இடங்களில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 25 பகுதிகள் மதுரை மாநகராட்சியின் எல் லைக்குள் வருகிறது. கடந்த காலங்களில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும்தான் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது கரைகளில் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், கரைகளில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். இது தவிர மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 13 வாய்க்கால்களில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. மேலும் வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், சிறு பாலங்களைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் பொது சுகாதாரத் துறையினர், மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நீண்ட காலப் பணிகள். இதனால், அத்திட்டத்தில் குறுகியகாலப் பணிகளை விரை வில் முடிப்பதற்கும், பருவ மழை தொடங்கும் முன் ஏற் கெனவே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிப்பதற்கும், மழைக் காலம் முடியும் வரை இனிமேல் பள் ளங்கள் தோண்டுவதைத் தற் காலிகமாக நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், நகரப் பொறியாளர் அரசு, உதவி ஆணையர்கள் சேகர், பிரேம்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in