

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைஅளிப்பதற்காக சித்த மருத்துவச் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல், தொற்றாளர்களுக்கு உணவாக இட்லி வழங்கப்பட்டது. இதில் ஒரு கரோனா நோயாளிக்கு வழங்கப்பட்ட இட்லியில் பல்லி இருந்தது. அதிர்ச்சிடையந்த அவர், சக தொற்றாளர்களிடம் அதைக் காட்ட, அனைவரும் காலை உணவை தவிர்த்தனர். மேலும் பணியில் இருந்த ஊழியர்களிடம் அந்த ‘பல்லியுடன் கூடிய இட்லி’யை காட்டினர். அதற்கு அவர்கள் பதில் கூறாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கரோனா நோயாளிகள் 30க்கும் மேற்பட்டோர் அந்த சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே வந்து, கல்லூரி வளாகத்தில் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த கடலூர் டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கல்லூரி வளாகத்தில் திரண்டிருந்த கரோனா நோயாளிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிகிச்சை மையத்தின் பொறுப்பாளர் மருத்துவர் செந்தில்குமார் தெரிவிக்க, நோயாளிகள் கலைந்து சென்றனர்.