Published : 07 Oct 2020 07:14 AM
Last Updated : 07 Oct 2020 07:14 AM

உடல்நலக் குறைவால் இறந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி திரட்டிய சக காவலர்கள்: காவல் ஆணையர் வழங்கினார்

உடல்நலக் குறைவால் இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு, அவருடன் பணிக்குச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் ரூ.25 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். அதை சென்னை காவல் ஆணையர் சம்பந்தப்பட்ட தலைமைக் காவலரின் மனைவியிடம் நேற்று வழங்கினார்.

சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் சரவண குமார் (37). சிறுநீரக குறைபாட்டால் சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இறந்தார். இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், கோபிகா (11), பிரியங்கா (9) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். சரவணகுமார் 2003-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்தவர். இவரது சிகிச்சைக்காக ஏற்கெனவே சுமார் ரூ.6 லட்சம் செலவு செய்திருந்த நிலையில், அவருடன் 2003-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த காவலர்கள் தமிழகம் முழுவதும் செல்போன் செயலி (வாட்ஸ்அப்) மூலம் இணைந்து இறந்த சரவணகுமாரின் குடும்பத்துக்கு உதவ முன் வந்தனர். அதன்படி ரூ.25 லட்சத்து 14 ஆயிரம் வசூல் செய்தனர்.

மருத்துவக் காப்பீடு

இதில் ரூ.20 லட்சத்து 90 ஆயிரத்து 618 ரூபாய்க்கு சரவணகுமாரின் இரு மகள்கள் பெயரில் எல்ஐசி நிதி பாலிசியாக செலுத்தியுள்ளனர். மீதமுள்ள ரூ.4 லட்சத்து 23,387-ஐ அவரது மனைவிக்கு தர ஏற்பாடு செய்தனர். மேலும், சரவணகுமாரின் மனைவி மற்றும் 2 மகள்களுக்கும் ஒரு வருடத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடும் எடுத்துக் கொடுத்துள்ளனர். பணம் திரட்டிய காவலர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், தலைமைக் காவலர்கள் வசூலித்த பணம் ரூ.25 லட்சத்து 14 ஆயிரத்துக்கான குடும்ப நலத்திட்ட ஆவணங்களை, இறந்த தலைமைக் காவலர் சரவணகுமாரின் மனைவி இந்துமதியிடம் நேற்று வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட இந்துமதி மற்றும் குழந்தைகள் 2003-ம் ஆண்டு காவல் குழுவினருக்கு நன்றி கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x