Last Updated : 07 Oct, 2020 07:09 AM

 

Published : 07 Oct 2020 07:09 AM
Last Updated : 07 Oct 2020 07:09 AM

சென்னை மற்றும் புறநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்ய ரூ.900 கோடியில் கழிவுநீரை நன்னீராக்கும் திட்டம்: சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தகவல்

சென்னை

சென்னை மற்றும் புறநகர் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு நீர் ஆதாரங்களை பெருக்கும் திட்டம் வேகமெடுத்துள்ளது. ரூ.900 கோடியில் கழிவுநீரை நன்னீராக்கி ஏரிகளில் விடும் திட்டங்களுக்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் கட்டப்படுவதாலும், சென்னைப் பெருநகர் விரிவடைந்து கொண்டே செல்வதாலும் குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் 700 மில்லியன் கனஅடி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு பெரும்பான்மையான இடங்களில் தளர்த்தப்பட்டிருப்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள சென்னைக் குடிநீர் வாரியம், “நீர் ஆதாரங்களைப் பெருக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரி கூறியதாவது:

சென்னை பகுதிகளின் குடிநீர் தேவைக்காக நீர் ஆதாரங்களைப் பெருக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் நெமிலியில் நடைபெறுகிறது. மேலும், மாமல்லபுரம் அருகில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

மேலும், கழிவுநீரை குடிப்பதற்கு ஏற்ற நிலையில் சுத்திகரித்து (3-ம் நிலை சுத்திகரிப்பு) போரூர், பெருங்குடி ஏரிகளில் விடுவதற்கான கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன. இப்பணிகள் முடிவடைந்ததும், வரும் ஜனவரி முதல் தினமும் தலா ஒரு கோடி லிட்டர் வீதம், இரண்டு கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மேற்கண்ட ஏரிகளில் விடப்படும்.

உலக வங்கி உதவி

ஏரிகளில் விடப்படும் தண்ணீர் இயற்கையாகவும் சுத்திகரிப்பாகும். ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். அதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் வாரியம் வழங்கும் குடிநீருக்கான தேவையும் குறையும். தேவைப்படும்போது சென்னை பகுதிகளின் குடிநீர் தேவைக்கும் ஏரி நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற திட்டங்களுக்கு இங்கிலாந்து தூதரகம் மற்றும் உலக வங்கி முன்னுரிமை அடிப்படையில் உதவ முன்வந்துள்ளன.

அதன்படி, பெருங்குடி ஏரியில் 60 மில்லியன் லிட்டர், நெசப்பாக்கம் ஏரியில் 50 மில்லியன் லிட்டர் என ஆக மொத்தம் தினமும் 110 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஏரிகளில் விடுவதற்கான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது. இத்திட்டத்துக்கு உலக வங்கி ரூ.900 கோடி கடன் தர ஒப்புக் கொண்டுள்ளது. இதைக் கொண்டு ஏரிகள் விரிவாக்கம், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

தற்போது தினமும் 2 கோடி லிட்டர் கழிவுநீர் சோதனை அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்டு, இந்த ஏரிகளில் விடப்படுகிறது. விரிவாக்கப் பணிகள் முடிந்தால் தினமும் 11 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, ஏரிகளில் விடப்படும். இதுபோன்ற திட்டப் பணிகள் வில்லிவாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நீர் ஆதாரங்களைப் பெருக்கும் பணிகள் முடிவடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x