Published : 07 Oct 2020 06:53 AM
Last Updated : 07 Oct 2020 06:53 AM

வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை உறுதி ஆகியுள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி (பெரு நிறுவன விவகாரங்கள்) அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

வேளாண் தொழிலை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்க 3 சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு சீர்திருத்த முயற்சியாகும். இந்தச் சட்டத் திருத்தங்கள் மூலம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், என்ன விலையில் வேண்டுமானாலும் விற்க முடியும்.

இன்றும் வேளாண்மை மாநில அரசுப் பட்டியலில்தான் உள்ளது. ஆனால் வேளாண் விளைபொருட்களை வெளி மாநிலங்களில் விற்கும் நடவடிக்கை மத்திய அரசு பட்டியலில் வருகிறது. அத் தகைய சட்டத்தை தான் மத்திய அரசு திருத்தியுள்ளது. மாநில அரசு சட்டங்களை மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

ஒருசில மாநிலங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை வேளாண் உற்பத்தி பொருள் விற்பனைக் குழுவிடம் தான் வழங்க வேண்டும். அவர்கள் நிர்ணயிக்கும் விலைதான் கிடைக்கும் என்ற நிலையில் வேளாண் உற்பத்தி பொருள் விற்பனைக் குழு சட்டங்கள் உள்ளன.

விவசாயிகளுக்கே உரிமை

மத்திய அரசின் திருத்தச் சட்டங்கள், விளைபொருட்களை யாருக்கு விற்க வேண்டும் என்ற உரிமையை விவசாயி களிடம் கொடுத்துள்ளன. அவர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு விவசாயி வேளாண் உற்பத்தி பொருள் விற்பனைக் குழுவிடம் விற்பனை செய்தால் 8.5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்தச் சட்டத்திருத்தம் மூலம் விவசாயிகள் டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் விற்பனை செய்ய முடியும் என்பதால், அந்த வரிகளை செலுத்த தேவையில்லை.

ஒரு வியாபாரி, விவசாயியிடம் ஒரு பொருளை வாங்கிய உடனே அவருக்கு ரசீது தர வேண்டும். 3-ல் 2 பங்கு தொகையை அப்போதே விவசாயியிடம் வழங்க வேண்டும். மீதம் ஒரு பங்கை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இதன்மூலம் விளைபொருளுக்கு உரிய தொகை காலத்தோடு விவசாயிகளுக்கு கிடைத்து விடுகிறது.

எளிதில் அழுகக்கூடிய பொருட்களை வாங்கி இருப்பில் வைத்து, மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் அழுகி வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தச் சட்டத்தின்கீழ் உற்பத்தி பொருளை விற்க மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுகிறது. விவசாயியின் நில உரிமை பறிக்கப்படாது.

குறைந்தபட்ச ஆதரவு விலை

வியாபாரியும் விவசாயிகளும் ஒப் பந்தம் செய்து கொள்வதன் மூலம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுகிறது. விவ சாயிகள், வியாபாரிகள் இடையிலான ஒப்பந்தம் மூலம் அவர்களுக்கு முதலீட்டு செலவு மற்றும் உழைப்புக்கான ஊதியம் நிச்சயம் உறுதி செய்யப்படும்.

இதுநாள் வரை நெல் மற்றும் கோது மைக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்தது. இனி அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க முடியும்.

இத்திருத்தச் சட்டங்களில், விவசாயி கள் மற்றும் வியாபாரிகள் இடையே மேற்கொண்ட ஒப்பந்தத்தில் சிக்கல் இருந் தாலோ, விவசாயி பாதிக்கப்பட்டாலோ, அவற்றின் மீது மாவட்ட ஆட்சியர் மூலமாக தீர்வு காண்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை குளிர்பதனக் கிடங்கில் வைத்துக்கொண்டு, வியாபாரிகள் கேட் கும் விலையில் கொடுக்காமல், அவர்கள் விரும்பிய விலையில் கொடுக்க முடி யும். குளிர்பதன கிடங்குகளை அமைப் பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு நிதி வழங்குகிறது.

மேலும் இ-நாம் (e-Nam) என்ற திட்டம் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருக்கும் வியாபாரிகளிடமும் தங்கள் பொருட்களை விவசாயிகள் விற்க டிஜிட்டல் தளத்தை மத்திய அரசு அமைத் துக்கொடுத்துள்ளது. இதை விவசாயிகள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘ எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை விவசாயிகள் நம்ப வேண்டாம்’

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக விவசாய தலைவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் விளக்கக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

விவசாயிகளுக்கு இந்த சட்டங்களால் நல்லது இல்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்வது விவசாயிகளுக்காக அல்ல. விவசாயிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நடுவர், இடைத்தரகர்கள் மூலம் சம்பாதித்தவர்கள் ஆதாயத்துக்காக போராடுகிறார்கள். ஆனால் விவசாயிகள் நலனுக்காகவே திருத்தங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.

எனவே, எதிர்க்கட்சிகள் சொல்வதை விவசாயிகள் நம்ப வேண்டாம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் மசோதாக்கள் தூக்கி வீசப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளாார். இதன்மூலம் நாடாளுமன்றத்தை அவர் அவமதித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x