Published : 07 Oct 2020 06:50 AM
Last Updated : 07 Oct 2020 06:50 AM

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?- இரவு வரை நீடித்த ஆலோசனை; இபிஎஸ் - ஓபிஎஸ் இன்று அறிவிக்க வாய்ப்பு: தலைமை அலுவலகத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

அதிமுக முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு குறித்து இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருதரப்பிலும் நேற்று இரவு வரைதீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இரு தரப்பு நிபந்தனைகள், கோரிக்கைகளும் ஏற்கப்படும் நிலையை எட்டியதாக கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்று இபிஎஸ்,ஓபிஎஸ் இருவரும் இணைந்து இன்று காலை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்தது, முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழு போன்ற சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, முதல்வர் வேட்பாளர் குறித்து வெளியில் பேசக் கூடாது என்று அதிமுக தலைமை அறிவித்தது. ஆனாலும், முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்ற இபிஎஸ் தரப்பினரின் பிடிவாதம் இன்றும் தொடர்கிறது.

இதற்கு முட்டுக்கட்டை போடவே, பொதுக்குழுவில் ஒப்புக்கொண்டபடி வழிகாட்டுதல் குழுஅமைத்து அதன்பிறகு முடிவு எடுப்போம் என்று ஓபிஎஸ் தனதுநிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் பெரும் விவாதமாகவே வெடித்தது. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் நேரடியாகவே காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட, முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு அக்.7-ம் தேதி (இன்று) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதற்கிடையில், முதல்வராக பழனிசாமி பெயரை அறிவிப்பதென்றால், வழிகாட்டுதல் குழுவை உடனே அமைப்பதுடன், அதிமுகவில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தனக்கே வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஏற்றால், கட்சியில் தங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லாமல் போய்விடும் என்று இபிஎஸ் தரப்பினர் கருதுகின்றனர். அதனாலேயே, வழிகாட்டுதல் குழுவை அமைக்க ஒப்புதல் தெரிவித்த நிலையிலும், அதிகாரம் தொடர்பான நிபந்தனையை ஏற்க தயங்கி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து சென்னை திரும்பிய ஓபிஎஸ் உடன் இரவே நிர்வாகிகள் பலர் இதுதொடர்பாக பேசியுள்ளனர். ஆனால், முந்தைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், தன் முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இரவு வரை ஆலோசனை

இதைத் தொடர்ந்தே, நேற்று காலை முதலில் ஓபிஎஸ் உடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். ஓபிஎஸ் வீடு முன்பு நேற்று காலை முதலே நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து, ஆதரவான கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

அதேநேரம், இபிஎஸ் உடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர்,காலை 11.30 மணிக்கு, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சண்முகம், உதயகுமார் ஆகியோர் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்து இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது வழிகாட்டுதல் குழு குறித்தும், அதில் இடம்பெறுவோர் குறித்தும் பேசியுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ், கட்சியில் தனக்கான அதிகாரம் குறித்து முடிவு எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். பின்னர், அங்கிருந்து சென்ற அமைச்சர்கள், இபிஎஸ்ஸிடம் தகவல்களை தெரிவித்தனர்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் நேற்று மாலை இபிஎஸ் உடன் மீண்டும் ஆலோசனை நடத்தினர். அதேநேரம், ஓபிஎஸ்ஸும் தனது ஆதரவாளர்களுடனும் அடுத்தகட்ட ஆலோசனையில் இறங்கினார்.

மாலை 6.30 மணி அளவில் ஓபிஎஸ் இல்லத்துக்கு அமைச்சர்சி.வி.சண்முகம் வந்து ஆலோசனையில் பங்கேற்றார். பிறகு, ஓபிஎஸ் வீட்டில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர் சி.வி.சண்முகம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் இரவு 7.40 மணிக்கு இபிஎஸ்ஸை சந்தித்தனர்.

இதில், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினரின் கருத்துகளும் இறுதிசெய்யப்பட்டு, அவர்களது நிபந்தனைகளும் ஏற்கப்படும் நிலையை எட்டியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே அறிவித்தபடி, அதிமுக முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு குறித்த அறிவிப்புகளை தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் இன்று காலை இணைந்து அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வரவேற்புக்கான அலங்கார வளைவு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

வழிகாட்டுதல் குழுவில் யார்?

இபிஎஸ். ஓபிஎஸ் அணிகள் இணைந்தபோது, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பும் முடிவெடுத்தது. அதன்படி அந்த குழுவை அமைக்க வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தரப்பினர் உறுதியாக உள்ளனர். இக்குழுவில் இபிஎஸ் தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா ஆகிய 6 பேரும், ஓபிஎஸ் தரப்பில் விருதுநகர் பாலகங்கா, சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூவரில் 2 பேர் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்திம் என 5 பேரும்இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x