

இந்தியா-பாகிஸ்தான் போரின் வெற்றி விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் நேற்று ராணுவத்தினர் மற்றும் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஜக்பீர் சிங் பங்கேற்று போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா- பாகிஸ்தான் இடையே 1965-ம் ஆண்டு நடைபெற்ற போரின் 50-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த போர் நினைவு தினத்தை முதல்முறையாக போரில் வெற்றிபெற்ற தினமாக இன்று கொண்டாடுகிறோம். இந்த விழா நாடு முழுவதும் உள்ள பல்வேறு ராணுவ மையங்களில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி போரில் பங்கேற்றோர், உயிரிழந்தோர் குடும்பத்தாரை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள், அப்போர் குறித்த கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படை நோக்கம், அப்போரில் நாட்டுக்காக ராணுவம் என்ன செய்தது என்று எடுத்துரைப்பதுதான். இந்த நாளில் தன்னலம் கருதாது, நாட்டை காக்கும் போரில் வீர மரணமடைந்த படை வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.