

மிதிவண்டிகளின் பயன்பாட்டை, ஊக்குவிக்கும் வகையில், மிதி வண்டிகளுக்கென தனிப் பாதைகள், மற்றும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றிற்கு அருகில் பொது மிதிவண்டிகள் பயன்பாட்டு வசதி (Bicycle Sharing Facility) ஆகியவை ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேரவையில் முதல்வர் கூறும்போது, "நகர்ப்புறங்களில், தனி நபர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல், பொது போக்குவரத்து வசதிகளின் பயன்பாடு, நடந்து செல்லுதல், மிதி வண்டிகளின் பயன்பாடு ஆகியவையும் குறைந்து வருகின்றன.
நடந்து செல்லுதல் மற்றும் மிதிவண்டிகள் மிகவும் அடிப்படையான போக்குவரத்தாகும். இவை மிக குறைந்த பொருட் செலவிலானவை மட்டுமல்லாமல் குறைந்த தூரங்களைப் பொறுத்தளவில் மிகச் சிறந்த போக்குவரத்து வசதிகளாகும்.
தனி நபர் வாகனங்களை ஒப்பிடும் போது, நடந்து செல்லுதல் மற்றும் மிதிவண்டிகள் ஆகியன, சாலைகளில் அரிதாகி வரும் இட வசதியை சிறப்பாக பயன்படுத்த உதவுகின்றன. மிதிவண்டிகள் மற்றும் பாதசாரிகளின் பயன்பாடு, தனிநபர் வாகனங்கள் பயன்படுத்தும் சாலை இட வசதியில், முறையே மூன்றில் ஒரு பங்கும், ஆறில் ஒரு பங்கும் ஆகும்.
இந்த அடிப்படை போக்குவரத்து வசதிகள் இயற்கையோடு இயைந்தவையாகும். மேலும், எரிபொருள் சேமிப்பு, காற்று, ஒலி மாசுக் கட்டுப்பாடு, மேம்பட்ட சுற்றுச்சுழல், மக்கள் நல்வாழ்வு மேம்பாடு போன்ற அளவிட முடியாத நீண்ட கால பயன்களை ஏற்படுத்தவும் இவை உதவிடும்.
எனவே, நடந்து செல்லுதல் மற்றும் மிதிவண்டிகள் போன்ற மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை, முதற் கட்டமாக திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசு மேற்கொள்ளும் என அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சாலைகளில் நடைபாதைகள் இல்லாமையால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெரிய சாலைகளில், அகலமான, தொடர்ச்சியான நடைபாதைகள், மிதிவண்டிகளின் பயன்பாட்டை, ஊக்குவிக்கும் வகையில், மிதி வண்டிகளுக்கென தனிப் பாதைகள், மற்றும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றிற்கு அருகில் பொது மிதி வண்டிகள் பயன்பாட்டு வசதி (Bicycle Sharing Facility) ஆகியவை ஏற்படுத்தப்படும்.
திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான, மேற்குறிப்பிட்ட வசதிகளை உள்ளடக்கிய மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்திற்கான தனித் தனி திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பணிகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்" என்றார்.