

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கருத்துக்களை மாணவர்களிடம் விதையிடும் முயற்சியில் சேலத்தைச் சேர்ந்த நூலகர் ஈடுபட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (44). இவர் வாழப்பாடி கிளை நூலகத்தில் மூன்றாம் நிலை நூலகராக பணிபுரிகிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது அபரிதமான பற்று கொண்டு, நட்பையும் பெற்றார்.
இதுகுறித்து மணிவண்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்தியாவை வல்லரசாக்கிட அப்துல் கலாம் எடுத்த முயற்சி அரிதிலும் அரிது. அவர் காலடிபடாத இடமே இந்தியாவில் இல்லை. லட்சியம், நேர்மை, சாதி, மத பேதமின்மை, மரம் நடுவதின் பயன், விட முயற்சியுடனான உழைப்பு, நம்பிக்கை, நாட்டுப்பற்று உள்ளிட்ட 10 கட்டளைகளை குழந்தைகளிடம் சேர்ப்பதில் அவர் பெரும் முயற்சி எடுத்தார்.
தனிமனிதராக, வயதை பொருட்படுத்தாமல் அவர் பணியாற்றியது என்னை மெய்சிலிக்க செய்தது. நாமும் நம்மால் முடிந்த நல்ல கருத்துக்களை உலகறிய செய்திட முடிவு செய்து, எனது குழந்தைகள் பெயரில் டெபாஸிட் செய்த ரூ.35 ஆயிரத்தை எடுத்து, ‘அப்துல் கலாமின் அமுத மொழிகள்’ என்ற நூலை எழுதி 2005-ம் ஆண்டு அப்துல்கலாம் கையால் வெளியிட்டேன்.
அப்துல்கலாமின் அமுத மொழி, பொன் மொழி, பவள மொழி, வைர மொழிகளை பிரதி எடுத்து இதுவரை ஒன்றரை லட்சம் மாணவர்களிடம் சேர்பித்துள்ளேன். அப்துல் கலாமை ஆறு முறை நேரில் சந்தித்துள்ளேன். 150 கடிதங்கள் எழுதியுள்ளேன். 17 கடிதங்கள் அவரிடம் இருந்து வந்துள்ளது. அவரது 40-வது நாள் நினைவு நாள் அன்று ராமேசுவரம் மண்டபத்தில் அவர் படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சென்று ‘அப்துல் கலாமின் கனவு மொழிகள்’ கையேட்டை மாணவர்களுக்கு வழங்கினேன்.
இந்தியாவின் உயரிய பதவியான குடியரசுத் தலைவராக அவர் இருந்தபோதும் சாதாரண நூலகரான என்னிடம் நட்பு கொண்டு ஆலோசனை வழங்கியது அவரின் மனிதநேயத்தை காட்டுகிறது. கலாமின் கருத்துக்களை மாணவர்களிடம் சேர்ப்பதை என் வாழ் நாள் லட்சியமாக கொண்டுள்ளேன். அவரது கனவு மெய்ப்பட ஒவ்வொரு தனி மனிதனும் அவர் வழியில் தொடர்ந்திட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
அப்துல் கலாமிடம், ‘சேவை திலகம்’ விருதும், பல்வேறு அமைப்புகள் மணிவண்ணனுக்கு பல விருதுகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.