

சேலம் மாவட்டம், ஏற்காட்டின் இயற்கை அழகை பாழாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்திருப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருப்பதால் சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்த்து வருகிறது. ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக அங்குள்ள அண்ணா மலர் பூங்கா, படகு சவ்வாரி, ரோஜா பூங்கா, வியூவ் பாய்ண்ட் போன்றவைகள் அமைந்துள்ளன.
மற்ற மலைபிரதேசங்கள் போல் இல்லாமல் இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மே மாத கோடை விடுமுறை நாட்களில் நடைபெறும் மலர் கண்காட்சியை காண பல்வேறு பகுதியில் இருந்தும் பயணிகள் வருகை அதிகம் இருக்கும்.
ஏற்காட்டின் இயற்கை அழகை பாதுகாக்க சுற்றுலா துறை மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக இயற்கை சீரழிவுக்கு அரனாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்திருப்பதோடு, குப்பைகளை கொட்டும் பகுதியில் மக்காத கழிவுகளை தனியாக கொட்ட பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்ட வேண்டாம் என்றும் அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் கொட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருந்தபோது பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த தீவிர கண்காணிப்பு இல்லாததால், ஏற்காட்டின் இயற்கை எழிலை சீர்குலைக்கும் வகையில் பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் ஆக்கிரமித்து இருப்பது சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அண்ணாபூங்கா ரவுண்டானா பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் மண் மாசுப்படும் வாய்ப்பு உள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க ஏற்காட்டில் சுற்றுலா துறை மற்றும் வனத்துறை மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது.