

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் சேவைத்துறைகள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த அனைத்துச் சேவைத் துறைகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மாவட்ட வருவாய்த் துறை, மீன்வளத் துறை, தென்னக ரயில்வே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாநகரப் பேருந்து கழகம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நீர்வளங்கள் துறை மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆய்வுக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேக்கம் அடையக்கூடிய இடங்களாக 2015-ம் ஆண்டு 306 இடங்கள், 2017-ம் ஆண்டு 205 இடங்கள், 2018-ம் ஆண்டு 53 இடங்கள், 2019-ம் ஆண்டு 19 இடங்கள் எனக் கண்டறியப்பட்டு, தற்பொழுது நீர்த்தேக்கம் 3-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே உள்ளது.
சென்னையில் 387.39 கி.மீ. நீளம் கொண்ட 471 பேருந்து சாலைகளும், 5524.61 மீ. நீளம் கொண்ட 33,845 தெருக்களும் உள்ளன. சென்னையில் கடந்த செப். 30 வரை பருவமழை 445.7 மி.மீ. பெய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 196 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட விடுபட்ட 498 இணைப்புப் பணிகள், 406 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் குளங்கள் மறுசீரமைப்பு போன்ற பணிகளால் கடந்த காலங்களில் 306 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. தற்பொழுது 3க்கும் குறைவான இடங்களில் மட்டுமே உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 210 நீர்நிலைகளில் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 133 நீர்நிலைகள் தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளன. 50 நீர்நிலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 27 நீர்நிலைகளில் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன.
இதேபோன்று கூவம், அடையாறு மற்றும் கால்வாய் கரையோரங்களில் வசிக்கும் 17,768 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பருவமழைக் காலங்களில் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தங்கு தடையின்றிச் செல்லும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 48 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வரத்துக் கால்வாய்கள் ரொபோடிக் எக்ஸவேட்டர், மினி ஆம்பிபியன் வாகனங்கள் கொண்டு தூர்வாரப்படுகின்றன.
மேலும், பருவமழைக் காலங்களில் 24 x 7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 60 உயர்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டு எளிதான போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வாகனங்களுடன் பொருத்தப்பட்ட மர அறுவை இயந்திரங்கள், 160 டீசல் மற்றும் பெட்ரோல் மூலம் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள், 11 மின்சாரம் மூலம் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள் அந்தந்த மண்டலங்களில் தயார் நிலையில் உள்ளன, 109 இடங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள படகுகள் மற்றும் தொடர்புடைய நபர்களின் விவரங்கள், 176 இடங்களில் நிவாரண மையங்கள், நடமாடும் மற்றும் நிரந்தரமான மருத்துவக் குழுக்கள் 44 எண்ணிக்கையிலும் தயார் நிலையில் உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் தாழ்வான இடங்களில் 5 எச்.பி மற்றும் 7.5 எச்.பி திறன் கொண்ட 458 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகள், 1,500 நபர்களுக்கு உணவு தயார் செய்ய பொது சமையலறை மற்றும் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரித்து வழங்கும் வகையிலும் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆப்தா மித்ரா திட்டத்தின் மூலம் 200 சமூக தன்னார்வலர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தென்னக ரயில்வே, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஆகிய துறைகளால் பராமரிக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் சிறுபாலங்கள் தூர்வாரப்பட்டு நல்ல நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், நீர்நிலைகள் அல்லது நீர்நிலைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்ற வருவாய்த் துறை, மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மழைநீர் வடிகால்வாய் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் உள்ள மின்சார கேபிள்களை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் தொலைத்தொடர்பு கோபுரங்கள் இயங்கத் தேவையான ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மெட்ரோ ரயில் நிறுவனத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்பு இருப்பின் அவற்றை வெளியேற்றத் தேவையான நீர் இறைக்கும் பம்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் வாயிலாக முறையான தகவல்கள் அவ்வப்பொழுது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். மேலும், சேவைத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும் எனவும், பருவமழை நெருங்கும் நேரத்தில் பணிகள் மேற்கொள்ள சாலை வெட்டு மேற்கொள்ள அனுமதி கண்டிப்பாக வழங்கப்படாது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சேவைத் துறைகளைச் சார்ந்த அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், காவல்துறை கூடுதல் ஆணையாளர் (வடக்கு) அருண், கூடுதல் காவல் ஆணையாளர் (போக்குவரத்து) என்.கண்ணன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சீதாலட்சுமி, இணை ஆணையாளர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவத், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் பிரபுசங்கர், வட்டார துணை ஆணையாளர்கள், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.